Friday, June 12, 2020

இந்திரா

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் வருகைக்காக.

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் சந்திப்பிற்காக.

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் உரையாடலுக்காக.

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் அன்பிற்காக .

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் உண்மைகளுக்காக.

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் துயரங்களுக்காக.

நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழ்த்திய
உன் நாடகங்களுக்காக.

Wednesday, June 10, 2020

அன்னா

தலைவர்கள் சிலர்
கொரோனா காலத்தில்
உயிரிழக்கிறார்கள்.

சிலர் தங்களது
பிறந்தநாட்களில்
இறந்துவிடுகிறார்கள்.

பிறந்த நாட்களில்
இனிப்பு வழங்கி
கொண்டாடுபவர்கள்
இறந்த நாட்களில்
படையலிட்டு
நினைவேந்துகிறார்கள்.

பிறந்த நாளில்
இறந்தவர்களுக்காக
செய்யப்படும்
நினைவேந்தல்களில் யாரும்
இனிப்பு வழங்குவதில்லை.

நள்ளிரவில்
பிறந்தவர்களுக்கு
இரண்டு பிறந்த நாட்கள்
இருக்கிறது.

நள்ளிரவில்
இறந்தவர்களுக்கு
இரண்டு இறந்த நாட்கள்
இருக்கிறது.

பெரும்பாலும்
பள்ளிக்கூடங்களில்
பிறந்த நாட்கள்
புதிதாக பிறந்துவிடுகின்றது.

காதல்
புதிதுபுதிதாக
பிறந்த நாட்களையும்
இறந்த நாட்களையும்
உருவாக்குகிறது.

பிறந்த நாளொன்றில்
கேக் வெட்டுவதுபோல்
இறந்த நாளில்
கேக் வெட்டுவது
சாத்தியமில்லை,

தலைவர்களுக்கு
பிறந்த நாளும் இறந்த நாளும்
ஒன்றாகவே இருக்கிறது
மக்களோடு நிற்கும்வரை.

எத்தனை காலம்
பிரார்த்தனை செய்தால்
பிறந்த நாளன்று
இறந்துவிடலாம் என்பதை
ஒருவரும் உறுதியாக
சொல்லமுடியவில்லை.

நீண்ட நாள் கனவுதான்
பிறந்த நாளொன்றில்
இறந்துவிடவேண்டுமென்பது.

அதற்கும்
வருடாவருடம்
காத்திருக்க வேண்டும்.

மணிமேகலா

அவரது
சட்டை மிகவும்
பிடித்திருந்தது.

ஒரு வங்கியின்
இலட்சினையின்
நிறம்.

பச்சையும்
வாடமல்லியும்
கலந்திருந்தது.

ஆகாயத்தை
பார்த்தபடியே
இருந்தார்.

ஏதோவொரு
மரத்தில் சுற்றியிருந்தது
அவரது கைலியின் ஒரு முனை.

கால்களை
அழுத்தியிருந்த
இலைகள் உதிர்ந்த
தரையில் வேறுபாடுகளில்லை.

எல்லா
தற்கொலைகளிலும்
காவலர்கள் சொல்வதற்கு
கதைகள் இருக்கிறது.

நின்றுகொண்டே
தூக்கிட்டு
தற்கொலை
செய்துகொள்ள
எவ்வளவு நீளம் வேண்டும்
கோவணத்துணி.

இடம்பெயர்ந்த
கத்தியொன்று
இடது பெருவிரலை
ஆசிர்வதித்த நாளொன்றில்
உறங்கவிடாமல்
வலிக்கிறது காயம்.

இந்த நாட்கள்
இன்னும் அரிதாகவே
இருக்கிறது.


Tuesday, June 9, 2020

ஜரினா

இந்நாள் எழுத்தாளர்
ஒருவர்
அரசுப்பணியிலிருக்கும்
எழுத்தாளர்களின் மீது
அவதூறு வழக்கிடுகிறார்.

கர்ப்பிணி பெண்ணொருத்தி
இறந்துவிட்ட கணவனின்
மரணம் நடிப்பாக இருக்க
பிரார்த்திக்கிறாள்.

கொரோனா லாக்டவுன்
காலமொன்றில்
பொதுத்தேர்வுகள்
விருப்பமின்றி
இரத்து செய்யப்படுகிறது.

முன்னாள் எழுத்தாளர்
ஒருவர்
தேர்வு ரத்துக்கு
எதிராக கருத்துக்களை
பதிவுசெய்கிறார்.

ஒற்றைக் கையில்
குழந்தையை தாங்கியபடி
காவல்காரரிடம்
முதுகுகாட்டி அடிவாங்கிக்
கொண்டிருக்கிறாள்
நெடுஞ்சாலையொன்றின்
குறுக்காக
நாடோடி பெண்ணொருத்தி.

பல்மருத்துவம் படித்த
பொதுவுடைமை தோழர் ஒருவர்
பொதுமருத்துவப் பலனின்றி
இறந்துபோனார்.

இந்த இரவும்
நிம்மதியை
பறித்துக்கொண்டே
பிரயாணிக்கிறது.

Monday, June 8, 2020

கிரகலெட்சுமி

உயரத்திலிருப்பதால்
மினுக்கிக் கொண்டிருக்கிறது
வடக்கிலிருக்கும்
நட்சத்திரமொன்று.

கர்ப்பிணி
பெண்ணொருத்தியின்
பதிமூன்று மணி நேரம்
பிரசவ வேதனை
எட்டு மருத்துவமனைகள்
பிரயாணித்து
தாயும் சேயும் இறந்தபோது
உலகிலிருந்து
விடுபட்டுபோனது.

பிறந்த குழந்தையொன்று
பல மருத்துவமனைகள்
பிரயாணித்து
மரணமடைந்தது.

நவக்கிரக கோவிலொன்றில்
சானிடைசர் தெளிக்கப்பட்ட
தெய்வங்களுக்கு
கொரோனா தொற்று காலத்தில்
குவாரண்டைனிலிருந்து
விடுதலை கிடைத்தது.

அனுமதியுடன்
வழிபாடுசெய்யும்
ஒடுக்கப்பட்ட மனிதர்கள்
தலை வெடித்து சிதறுவதற்கு
ஒரு துப்பாக்கி ரவை
போதுமாக இருக்கிறது
எப்போதும்.

மழை வீசிய
பொழுதொன்றில்
மெலிதாக
காற்று நனைத்தது.

அந்த நெருப்பை
அணைக்கமுடியவில்லை!

ஹீரா

ஒரு
தேநீர் கடைக்காரர்
ஒரு
தெருவின் வணிகர்.

ஒரு
தெருவின் வணிகர்.
ஒரு
அமைப்பின் உறுப்பினர்.

ஒரு
அமைப்பின் உறுப்பினர்
ஒரு
பிரிவினை பிரச்சாரகர்.

ஒரு
பிரிவினை பிரச்சாரகர்
ஒரு
அரசியலைமைப்பின் உறுப்பினர்.

ஒரு
அரசியலைமைப்பின் உறுப்பினர்
ஒரு
தேசத்தின் முதல்வர்.

ஒரு
தேசத்தின் முதல்வர்
ஒரு
அரசியலமைப்பின் வணிகர்.

வடிவங்களை
மாற்றிக்கொள்ளும்
மனிதர்களின்
குவிய மாறுதலில்
காட்சிப்பிழைகளும்
தோற்றமளிக்கின்றன.

Saturday, June 6, 2020

அதீதி

அவர்கள்

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு குறுங்கதையை

ஒரு சிறுகதையை

ஒரு புதினத்தை

ஒரு கவிதையை

இவற்றில் எதுவுமல்லாத

ஏதோவொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு அதிகாலையில்

ஒரு பின்னிரவில்

ஒரு நண்பகலில்

ஒரு நள்ளிரவில்

ஒரு முன்பகலில்

ஒரு பின்னிரவில்

ஒரு அந்தியில்

ஒரு நடுநிசியில்

எப்பொழுதும் 

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


நாள், நேரம், இடம் என

குறிப்புகளுடனே

படைப்புகளை

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


அன்பை, மகிழ்ச்சியை

துயரத்தை, இரக்கத்தை

இயலாமையை, போதாமையை

வலிகளை, வேதனைகளை

எல்லாவற்றையும்

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


மனிதனாக

விலங்காக

பறவைகளாக

தாவரங்களாக

பிரபஞ்சமாக

எல்லாமுமாக

கூடுவிட்டு கூடுபாய்ந்து

அகம், புறமென உணர்ந்தவை

யாவற்றையும் குறிப்பெடுத்து

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


அனைத்தையும்

முடிவறாத காலத்தின் பிரதியாக

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


அதீதமான காலத்தில்

அமானுஷ்யமாக 

எழுதிக் கொண்டிருகிறார்கள்.


அவர்களது

ஒவ்வொரு எழுத்திலும்

யாரேனும் ஒருவர் எங்கேயோ

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.