Monday, July 22, 2013

ஆமீரா

நீயும் நானும்
காதலர்கள்...
இப்பொழுதும்
ஒரே ஊரில்
வசிக்கிறோம்....
நம் திருமணம்
ஒரே ஊரில்
ஒரே மண்டபத்தில்
ஒரே நாளில்
ஒரு வருடம்
முன்பு உனக்கும்
பிறகு எனக்கும்
நடந்தது....
நீயும்
நானும்
மகிழ்ச்சியாக
இருப்பதாக
ஊர் மக்கள்
சொல்லுகிறார்கள்.....
நம்
துயரங்களை மட்டுமே
அறிந்திருந்த ஊருக்கு
நம் மகிழ்ச்சியை
தெரிவித்தது சரியா
தவறா என்பது
ஒவ்வொரு முறையும்
புரிவதில்லை.....

சாக்ஷி

நட்பின்
பெருமர நிழலில்
உலர்ந்த காதல்
கிளைகளில்
தலைகீழாய்
தொங்கிய அன்பை
பறித்துச் சுவைக்க
வீசியெறிந்த
வார்த்தைகளால்
இறந்தது....
தனிமையில்
உடன்கட்டையேறிய
நிழலொன்றின்
பின்தொடர்ந்த
உருவத்தின்
இதயத்தில்
துளிர்த்திருந்த
காதல்...
திடுக்கிட்டு விழித்திடும்
தருணங்களில்
நினைவில் வரும்
முதல் காதலோடு
கொஞ்சம் கண்ணீரும்.....
எப்பொழுதும்
காதலோடு இன்னும்
சிலவற்றை
இழந்துவிடுகிறோம்....

ஈவ்லின்

புத்தகக்
கடைகளிலெல்லாம்
உனக்குப் பிடித்த
புத்தகங்களையே
புதிது புதிதாக
என்னிடம்
தருகிறார்கள்....
பரிசளிக்க
முடியதென்றாலும்
பத்திரமாய்
வாங்கி வைத்திருக்கிறேன் ...
என்றாவதொரு நாள்
நினைவுகள்
மேவும் பொழுதுகளில்
உன்னுடன்
உரையாடிக் கொள்வேன்....

நிர்பயா

அகால வேளைகளில்
விழித்துக் கொள்ளும்
உணர்வுகள்
உன் மீதான தேடலை
தொடங்கிடும் .....
மஞ்சள் பூக்கள்
இதழ்கள் விரிக்கும் தருணங்களில்
சிவப்பு மலர்களும்
கண் சிமிட்டும் ...
தனிமையை
அவித்து உண்ணும்
நினைவுப் பசியை
எப்படி அணைப்பது ....
விளக்குகளைப்
போன்று நினைக்கும்
பொழுதுகளில்
நிறுத்த முடிவதில்லை.
இரவுகளை...
முகம் தெரியாத
மனிதனாய்
இடம் தெரியாமல்
இருந்துவிடும்
சுகம் அனைவருக்கும்
வாய்ப்பதில்லை....

ஆகாங்க்ஷா

வெறுமையை நிரப்பிக்
கொள்ளும்
வாழ்க்கை....
சட்டென்று தோன்றி
மறையும்
மரணக் குறிப்புகள்...
நட்பு
பகை
அன்பு
காதல்
உறவு....இவையாவும் அல்லது
ஏதாவதொன்று இறந்து/பிரிந்து போகும்
நாளொன்றில் மீண்டும்
தோன்றிவிடும்
யாருக்கும் பரிசளிக்காத
மரணக் குறிப்புகள்......
இருத்தலுக்கும்
இல்லாமைக்கும்
இடையில் சிக்கித்தவிக்கும்
பயணங்களில்
அதிகம் இளைப்பாறக்கூடும் ...
நம்பிக்கைகள்
நிலையற்றதாகும் நாளொன்றில்
யாருக்கேனும் அகப்படலாம்
மரணக்குறிப்புகளைச்
சேகரித்தவனின்
மரணம் குறித்தான குறிப்புகள் ....