Saturday, November 3, 2012

அஃப்ரீன்

ஒற்றை 
மரமொன்றின் 
கீழ்நின்ற
தருணங்களில்
சிலிர்க்கச் செய்யும் 
அன்பின் துளிகள் 
மழையென
உணர்த்தும்....
நெருங்கி விலகி
விலகி நெருங்கி
விழித்தொதுங்கும்
தருணங்களில்
இரசித்தே
நிற்கும்
மழையும்...

சமுத்ரா

மனிதர்களற்ற
தொலைவுகளை
அளந்து வரும்
பார்வை உணர்த்தும்
பொருட்களின்
தனிமையில்
வெளித்தெரியும்
துயரம்.....
நிசப்தங்களின்
அதிருப்தியில்
சட்டென்று
பறந்துவிடும்
மனது....
மனிதர்களை
நேசிக்கும்
இயற்கையைப்
போன்று
மனிதர்கள் இல்லை...
தனிமையைக்
கொல்லும் கதைகளில்
உலவும்
அமானுஷ்யங்களின்
அடர்த்தி....
தவிக்கச் செய்யும்
உறவுகளிடம்
கிடைப்பதில்லை
உண்மை.....

Friday, October 26, 2012

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

     இளம் வயதில் திருமணம் செய்து பத்தாண்டுகள் கழிந்தும் குழந்தையில்லாத பெண்ணொருத்தி வேற்றுச் சாதிக்காரனோடு ஓடிவிடுகிறாள்.மனைவியின் நடத்தையினால் தன் குடும்பத்துப் பெயர் கெட்டுவிடக்  கூடாதென்று அவளின் கணவனும் வீட்டைப் பூட்டிவிட்டு ஓடிவிடுகிறான். அண்ணனையும் அண்ணியையும் காணமல் தம்பியே சொத்துக்களைப் பராமரிக்கிறான்.மானம் ரோசம் தாங்காமல் ஊரைவிட்டு ஓடிபோய் இராணுவத்தில் சேர்ந்த சபாபதி பிள்ளை பர்மாவுக்கு செல்லுகிறார்.அங்கு அவருடைய நண்பன் மைக்கேல் தான் இறந்து போகும் தருவாயில் தன் மனைவியையும் வழியில் கண்டெடுத்த ஆண்பிள்ளையையும் பார்த்துக் கொள்ளும்படி சபாபதியிடம் ஒப்படைக்கிறான்.

மூவரும் எப்படியோ தப்பி இந்தியாவிற்கு வந்தபிறகு இரயில்வேயில் ஃ பயர் மேனாக வேலைக்கு சேருகிறார் சபாபதி பிள்ளை.அவர் தன் வளர்ப்பு பிள்ளைக்கு ஹென்றி யென  பெயரிட்டு அவனுடைய விருப்பபடியே வளர்க்கிறார்.சபாபதியின் மனைவிக்கு அதில் உடன்பாடு இல்லைஎன்றாலும் ஹென்றியை அவனுடைய தந்தையின் விருப்பப்படியே பள்ளிக்குச் சென்று படிக்க கட்டாயப் படுத்துவதில்லை.

குடிக்கும் தருணங்களில் எப்பொழுதாவது தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றியும்,உறவுகளைப் பற்றியும், முதல் மனைவியப் பற்றியும் ஹென்றியிடம் மட்டும் சபாபதி சொல்லுவதுண்டு.பணியிலிருந்து சபாபதி ஓய்வுபெற்று சில ஆண்டுகளில் தெரேசாவும் அடுத்த சில ஆண்டுகளில் சபாபதியும் இறந்துவிடுகின்றனர்.சபாபதி இறந்து மூன்றாம் நாள் தன் தந்தையின் உறவுகளைத் தேடி கிருஷ்ணராஜபுரம் வருகிறான் ஹென்றி.

தேவராஜன் ஹென்றிக்கு நண்பனாகிறான். தேவராஜன் ஹென்றியை விநோதமானவனாகவே புரிந்து கொள்கிறான். தேவராஜன் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் வாத்தியராக இருக்கிறான்.அவன் மனைவி அவனுடைய அக்காவிடம் சண்டையிட்டுக் கொண்டு பிறந்த ஊருக்கு சென்றிருக்கிறாள் .ஹென்றி தேவராஜனின் உதவியுடன் மணியக்காரரிடம் சொல்லி பஞ்சாயத்துக் கூட்டி சொத்துக்களின்  மீது தனக்கிருக்கும் உரிமையை தெரிவிக்கிறான். ஊர் மக்கள் அனைவரும் சபாபதியின் தம்பி துரைக்கண்ணுவுக்காக   வருத்தப்படுகின்றனர். துரைக்கண்ணுவோ  தனக்கு அந்த சொத்தில் எந்த உரிமையும் கிடையாது என்று சொல்லி சொத்துக்களை ஹென்றியிடமே சேர்க்கிறான்.

ஹென்றி அங்குள்ள கிராமத்து மக்களின் உதவியோடு அந்த பழைய வீட்டைப் புதுப்பிக்கிறான் .வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கும் நாளொன்றின் நள்ளிரவில் திடிரென சப்தம் கேட்டு அங்குள்ளவர்கள் சென்று பார்க்கும்பொழுது ஒரு மனநலம் தவறிய இளம் பெண்ணொருத்தி நிர்வாணமாக நிற்கிறாள். அவளுக்கு பேபி எனப் பெயரிட்டு ஆடை கொடுத்து அங்கேயே தாங்கிக்கொள்ள சொல்கிறான்.ஹென்றி சொல்வதைக் கேட்டு அவள் நடப்பது அங்குள்ளவர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

முழுவதுமாய் கட்டி முடிக்கப்பட்ட அந்த வீடு கிரகப்பிரவேசம் செய்யப்படும் பொழுது நடு முற்றத்தில் விளக்கு ஏற்றிவைத்து விழுந்து கும்பிட்டு வணங்கும் அவள், தன்  புது உடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு ஹென்றி முதன் முதலில் கொடுத்த வெள்ளை ஆடையொன்றை  உடுத்திக் கொண்டு வயல் வெளிகளின் ஊடே ஒய்யாரமாய் நடந்து செல்கிறாள்.

தமிழ் இலக்கிய உலகில் உயர்ந்த மனிதர் எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களின் மிகச் சிறந்தப் படைப்புகளுள் ஒன்று ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.ஜேகே வின் எழுத்துக்கள் பரிச்சயமான ஒன்றென்றாலும் வயது கூடும்பொழுது வந்துவிடுகின்ற அனுபவம் தருகின்ற பக்குவம் ஏற்ப்படுத்தும் உணர்வுகள் சற்றே ஆழமான புரிதலைத் தருமென்பது  நிதர்சனம்.ஒரு கதைக் களத்தில் இயங்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு எதிர்மறைத் தாக்கத்திலிருக்கும்பொழுதும் சக மனிதன் ஒருவனின் நேர்மறை எண்ணங்கள் உண்டாக்கும் விளைவுகள் ஆழமான புரிதலைப் பரிசளிப்பது பரவசம்.

கனகவல்லி,அக்கம்மாள்,கிளியாம்பாள்,பேபி,ஹென்றி,தேவராஜன்,துரைக்கண்ணு,பாண்டு,மண்ணாங்கட்டி,மணியக்காரர்,தர்மகர்த்தா, சபாபதி பிள்ளை, நீலாம்பாள்  என்று ஓவ்வொரு பாத்திரமும் தன்னைப் புதினத்தில் பரிமளிக்கும் விதம் இயல்பு.ஒரு சிலையை, ஒரு ஓவியத்தை,அல்லது எந்தவொரு படைப்பையும் நுட்பமாக படைக்கின்ற படைப்பாளியின் படைப்பனுபவம்  அனைவருக்கும் கிடைப்பது ஒரு வரம்.யுகங்கள் எதுவென்றாலும் மனிதர்களின் உண்மையான இயல்புகள் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறது.மனிதர்களுக்கு மனிதர்களிடம் தேவையானது மனிதம் மட்டுமே....அதில் அன்பைத் தவிர வேறெதையும் எதிர்பார்ப்பதற்கில்லை.

வஞ்சகம்,துரோகம்,பகைமை, வெறுப்பு என எந்தவொரு எதிர்மறை உணர்சிகளையும் வெளிப்படுத்தாத , முழுவதும் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் தன்மை, இந்த உலகம் இயல்பாய் எத்தனை அழகாய் இருக்க முடியும் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.பேபி பிரிந்து செல்லும்பொழுதும் "இந்த வீட்டின் வாசற்கதவுகளும் தோட்டத்துக்கதவுகளும் எப்பொழுதும் அவளுக்குத் திறந்தே கிடக்கும்","அவளாகவே வருவாள்!'  என்று நினைத்துக் கொண்டான்  ஹென்றி...

இப்படி அவள் அவள் போகப்போவதை அவன் அவள் வந்த அன்றே எதிர்பார்த்தான்.

"இப்போது அவள் ஏன் போகிறாள்?" என்று மனத்துள் எழுந்த கேள்விக்கு 

" அப்போது அவள் ஏன் வந்தாள் ?" என்ற இன்னொரு கேள்வியே பதிலாயிற்று.

குற்றங்கள் இல்லாத 

உலகம் குணத்தில் 

உயர்ந்து நிற்கும் .......

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  ஒரு வீடும் ஒரு உலகமும் சஞ்சரித்தது வாழ்ந்து கொண்டிருக்கிறது....
உண்மையாய்...நேர்மையாய்....அழகாய்..அன்பாய்....

புத்தகம் பரிசளித்த தோழர் :பிரவின்ஷ்கா அவர்களுக்கு நன்றி .....

Sunday, September 9, 2012

சுதாம்ஷு

இரவுகளைத் திடுக்கிட்டு 

விழிக்கச் செய்யும் 

அமானுஷ்ய கனவுகள்...

தனிமையில் ஒளிரும் 

விளக்குகள் 

துயரங்களில் உழலும்... 

தெருக்களில் 

அலைந்து திரியும் 

மனிதர்கள் ஊளையிடும் 

நடுநிசியில் 

உறங்கச் செல்லும் 

பூக்கள்...

இரவுகளை  தாலாட்டி 

உறங்கவைத்த 

உருவங்களை காணவில்லை

விழித்த பிறகும்....

Sunday, January 22, 2012

ஸ்டெஃ பானி

கடந்துசென்ற காலங்களில்

தொலைந்துபோன

கனவுகள்...

அலைக்கழிக்கும்

ஏக்கங்கள்...

தவிக்கச்செய்யும்

பிரிவுகள்...

நிகழ்ந்துவிடாத

திருமணங்களில்

ஒளிந்திருக்கும்

நம்பிக்கைகள்....

தொலைத்துவிட்ட

பருவத்திற்குப்பின்

இழப்பதற்கு வேறென்ன

எஞ்சியிருக்கும்

நம்பிக்கையைத் தவிர....

சித்ரங்கதா

நட்சத்திரங்கள்

உறங்கச்சென்ற

நாளொன்றில்

தனிமையில் உறங்கிய 

நிலவொன்றின்

கனவுகளில்

குதிரையில் பவனித்த 

கதிரவனின் 

கரங்களில் தவழும்

சிதைந்த நம்பிக்கைகள்

உதிர்க்கும்

நிராகரிப்பின் வலி....

காத்திருப்பின்

நீளமறியும் தருணங்களில்,

தவிப்பின் 

வலியுணரும் சமயங்களில்,

பிரிவின் 

அதிர்வுகளில் 

பெருக்கெடுக்கும்

கண்ணீர்த்துளிகள்....

பூக்களைப் போன்று

மலர்வதில்லை

மனிதர்கள் தினமும்....