Sunday, October 23, 2011

முகத்தில் தெரிந்த முகம்

திருமணமாகாத ஆண்களின் அறை என்று சொல்லப்படும் வீடு அது.
வேகமாக கதவு சாத்தப்பட்டது. அந்த அறையில் எப்பொழுதும் நிகழ்கின்ற ஒன்றுதான். கதவை இழுத்து சாத்தியதும் எங்கள் அலுவலக கோபம் பொதுவாக குறைந்து விடும். இல்லையெனில் பாருக்கோ, படத்துக்கோ போகவேண்டும். மாரிக்கு அவ்வளவு கோபம் வந்தது அதுதான் முதல் தடவை.
சரி சிறிது நேரம் பொறுத்து கதவு திறக்கும் என்று டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கதவு திறந்து வெளியில் வந்தவன் "சவுண்ட குறைச்சு தொலைடா " என்றான். அதற்கு மேல் அங்கிருப்பது ஏதோ மாதிரி இருந்தது.டி.வி யை அமர்த்திவிட்டு, சட்டையை அணிந்து கொண்டு வெளியில் கிளம்பினேன்.
"சீக்கிரம் வந்துடுவல்ல " என்றான்.
"இல்லடா லேட்டாகும், நீ தூங்கிக்க".
சரியென்று கதவை சாத்தி விளக்குகளை அணைத்தான்.
நான் வெளியில் வந்து விட்டேன்.
அப்படியே நடந்து டி.நகர் செல்லலாம் என்று தோன்றியது. மெயின் ரோடு அடைந்ததும், இடது புறமாக நடக்கத் தொடங்கினேன்.
வாகனங்கள் , பூச்சிகளைப் போலவே இங்கும் அங்குமாக இயங்கிக் கொண்டு இருந்தன. அந்த பைக்கில் சென்ற பெண்ணை வேறு ஏதோ ஒரு ஆணுடன் பார்த்தது போல இருந்தது. அந்த பையன் வண்டி ஓட்ட முடியாத அளவுக்கு இறுக்கி கட்டி பிடித்து இருந்தா. ஒருவேளை ரொம்ப பிடிக்குமோ என்னவோ. இந்த கண்றாவி எல்லாம் என் கண்ணுல ஏன்தான் விழுதோ . திட்டிக் கொண்டே நகர்ந்தேன் .
வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். ஏதோ நினைவில் நந்தனம் சிக்னல் தாண்டி சென்றிருந்தேன் . மணி பார்த்தேன் ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகியிருந்தது . இனிமேல் திரும்பி டி.நகர் சென்றுவிட்டு சைதாப்பேட்டை போவது ரொம்ப நேரம் ஆகும் என்பதால் திரும்பி வீட்டிற்கு நடந்தேன்.
சாலையோர நடை மேடையில் நிறைய குடும்பங்கள் உணவருந்திக் கொண்டு இருந்தார்கள். எனக்குத்தான் அவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருவதாக தோன்றியது. அரசியல்வாதிகள் வச்சிருக்கிற வைப்பாட்டிகள் எல்லாம் வசதியாகத்தான் இருக்குங்க. அவனுங்கள தேர்வு பண்ற நம்மதான் தெருவுல நிக்கிறோம். இந்தவாட்டி ஒட்டு கேட்டு வர்றவன செருப்பால அடிக்கணும். மொத்தமா எல்லாரையும் மனசுக்குள்ள திட்டிகிட்டே வந்ததுல சைதாப்பேட்டை வந்துடுச்சு.
மணி பார்த்தேன் எட்டுதான் ஆகியிருந்தது. மாரி சாப்பிட்டான இல்லையா என்று தெரியவில்லை. சரியென்று கால் செய்தேன் , ரிங் சென்று கால் முடிந்தது. உடனே அவனிடம் இருந்து கால் வந்தது.
"என்னடா " என்றான் .
ஒன்னும் இல்ல...சாப்பிட்டியா ...
ம்ம்ம் ...எனக்கு வேணாம்டா ... "நீ எங்க இருக்க " என்றான்.
சைதாப்பேட்டைல...
அது தெரியுது...சைதாப்பேட்டைல ... எங்க இருக்க
பக்கத்துலதாண்ட இருக்கேன் . வந்திடுறேன் என்றேன் .
எனக்கு பார்சல் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தேன். சிறிது நேர நடைக்கு பிறகு வீட்டிற்கு அருகே வந்து விட்டேன். முதல் தளத்தில் வீடு. மாடிப் படிகளில் ஏறினேன்.
எதிரே ஒரு பெண் இறங்கி வந்து கொண்டிருந்தாள். யாராக இருக்கும் இந்த பெண் என்ற யோசனைகளோடு படியேறினேன். ஒருவேளை இரண்டாம் தளத்தில் குடியிருக்கும் முஸ்லீம் வீட்டிற்கு வந்து இருக்கும். பார்க்க அப்படித்தான் தெரிந்தது. கை நிறைய வளையல். இன்னும் கேட்கும் கொலுசு ஒலி. காற்றில் மிதந்து செல்லும் மல்லிகை வாசம். மினு மினுக்கும் வெண்ணிற புடவை. அழகாவே இருந்தா.
கதவு திறந்து கிடந்தது.வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முகம் கழுவி கொண்டிருந்தான் மாரி . சட்டையை அணிந்து கொண்டு, டேய் சாப்பிட போறேன் என்றான். அதற்குள் இரண்டு முறை அவனுடைய மொபைல் அடித்து நின்றது.
அப்பொழுதுதான் அவன் முகத்தைப் பார்த்தேன். எதுவோ மின்னுவது போல தோன்றியது. என்னடா என்று கேட்பது நாகரீகமாக இருக்காது என்பதால், சற்று தள்ளி வந்து நன்றாக விளக்கு வெளிச்சத்தில் பார்த்தேன். சந்தேகம் இல்லாமல் அது ஜமிக்கி பவுடர்தான். அந்த பொண்ணு புடவையிலும் இந்த மினுமினுப்பு தான் பார்த்தேன். அதற்குள் அவன் சென்றிருந்தான்.
அவ புடவைல இருந்த ஜமிக்கி எப்படி இவன் முகத்துக்கு வந்துச்சு... என்ன எழவ பண்ணுனானோ...தெரியல...
சிறிது நேரத்தில் ராமு வந்தான். இன்னொரு ரூம்மேட்.
அவனிடம் மெதுவாக ஆரம்பித்தேன். " டேய் , ஆபிஸ் பக்கத்துல ரூம் இருக்குன்னு சொன்னாங்க . அங்க போய்டலாம்னு இருக்கேன்"
"அப்படியா ...உனக்கு எது வசதியோ அத பாத்துக்கடா ...என்ன நான்தான் வேற ரூம்மேட் பாக்கணும் " என்றான்.
மாரி என்கிட்டே ஒரு வார்த்த சொல்லி இருந்தா நானே வெளில போயிருப்பேன்.என்கிட்டே உண்மையா இருக்கணும்னு அவனுக்கு ஏனோ தோன்றவில்லை.
சமயத்துல நானும் அப்படி உண்மையா இருந்திருக்க மாட்டேன் போல...
தூங்க சென்றபொழுது, நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது " சூதனமா இருக்கணும் தம்பி...". ஆனா.. எனக்குத்தான் தூக்கமே வரலை.

அம்பாலிகா

கலைந்து

கிடக்கும்

மனதை

அடுக்கி வைக்கும் 

புத்தகம்...

ஒளிந்து

கிடக்கும்

மனதை

ஒளிரச் செய்யும்

கவிதை...

விழுந்து

கிடக்கும்

மனதை

நடக்கச் செய்யும்

நம்பிக்கை...

உடைந்து

கிடக்கும்

மனதை

இணைத்து வைக்கும்

காதல்...

அழிந்து

கிடக்கும்

மனதை

துளிர்க்கச் செய்யும்

நட்பு...

விளைந்து

கிடக்கும்

மனதை

அறுவடை செய்யும்

உலகம்....

வியாபார உலகம்...

Monday, October 3, 2011

இராஜராஜேஸ்வரி

விரிந்து

கிடக்கும் வானம்

பிரித்துப்

பெய்யும்

மழை!

-----------------------

நிராகரிப்பின்

வலியுணரும்

மனிதர்களின்

இரவுகளை

நிறைத்திருக்கும்

நட்சத்திரங்கள்....

-------------------------

நினைவுகளால்

உருவான

சிலுவையில்

அறைந்திட்ட

இயேசுவே

காதல்....

---------------------------

காரணங்களால்

நிறைந்த

வீடுகள்....

மனிதர்களால்

பிரிந்து போனது!

--------------------------

தனிமை

சிறையிலிருக்கும்

ஆயுள்கைதிகளின்

மிகப்பெரியக்

குற்றம்

நேசித்தல்......