Sunday, October 23, 2011

முகத்தில் தெரிந்த முகம்

திருமணமாகாத ஆண்களின் அறை என்று சொல்லப்படும் வீடு அது.
வேகமாக கதவு சாத்தப்பட்டது. அந்த அறையில் எப்பொழுதும் நிகழ்கின்ற ஒன்றுதான். கதவை இழுத்து சாத்தியதும் எங்கள் அலுவலக கோபம் பொதுவாக குறைந்து விடும். இல்லையெனில் பாருக்கோ, படத்துக்கோ போகவேண்டும். மாரிக்கு அவ்வளவு கோபம் வந்தது அதுதான் முதல் தடவை.
சரி சிறிது நேரம் பொறுத்து கதவு திறக்கும் என்று டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கதவு திறந்து வெளியில் வந்தவன் "சவுண்ட குறைச்சு தொலைடா " என்றான். அதற்கு மேல் அங்கிருப்பது ஏதோ மாதிரி இருந்தது.டி.வி யை அமர்த்திவிட்டு, சட்டையை அணிந்து கொண்டு வெளியில் கிளம்பினேன்.
"சீக்கிரம் வந்துடுவல்ல " என்றான்.
"இல்லடா லேட்டாகும், நீ தூங்கிக்க".
சரியென்று கதவை சாத்தி விளக்குகளை அணைத்தான்.
நான் வெளியில் வந்து விட்டேன்.
அப்படியே நடந்து டி.நகர் செல்லலாம் என்று தோன்றியது. மெயின் ரோடு அடைந்ததும், இடது புறமாக நடக்கத் தொடங்கினேன்.
வாகனங்கள் , பூச்சிகளைப் போலவே இங்கும் அங்குமாக இயங்கிக் கொண்டு இருந்தன. அந்த பைக்கில் சென்ற பெண்ணை வேறு ஏதோ ஒரு ஆணுடன் பார்த்தது போல இருந்தது. அந்த பையன் வண்டி ஓட்ட முடியாத அளவுக்கு இறுக்கி கட்டி பிடித்து இருந்தா. ஒருவேளை ரொம்ப பிடிக்குமோ என்னவோ. இந்த கண்றாவி எல்லாம் என் கண்ணுல ஏன்தான் விழுதோ . திட்டிக் கொண்டே நகர்ந்தேன் .
வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். ஏதோ நினைவில் நந்தனம் சிக்னல் தாண்டி சென்றிருந்தேன் . மணி பார்த்தேன் ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகியிருந்தது . இனிமேல் திரும்பி டி.நகர் சென்றுவிட்டு சைதாப்பேட்டை போவது ரொம்ப நேரம் ஆகும் என்பதால் திரும்பி வீட்டிற்கு நடந்தேன்.
சாலையோர நடை மேடையில் நிறைய குடும்பங்கள் உணவருந்திக் கொண்டு இருந்தார்கள். எனக்குத்தான் அவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருவதாக தோன்றியது. அரசியல்வாதிகள் வச்சிருக்கிற வைப்பாட்டிகள் எல்லாம் வசதியாகத்தான் இருக்குங்க. அவனுங்கள தேர்வு பண்ற நம்மதான் தெருவுல நிக்கிறோம். இந்தவாட்டி ஒட்டு கேட்டு வர்றவன செருப்பால அடிக்கணும். மொத்தமா எல்லாரையும் மனசுக்குள்ள திட்டிகிட்டே வந்ததுல சைதாப்பேட்டை வந்துடுச்சு.
மணி பார்த்தேன் எட்டுதான் ஆகியிருந்தது. மாரி சாப்பிட்டான இல்லையா என்று தெரியவில்லை. சரியென்று கால் செய்தேன் , ரிங் சென்று கால் முடிந்தது. உடனே அவனிடம் இருந்து கால் வந்தது.
"என்னடா " என்றான் .
ஒன்னும் இல்ல...சாப்பிட்டியா ...
ம்ம்ம் ...எனக்கு வேணாம்டா ... "நீ எங்க இருக்க " என்றான்.
சைதாப்பேட்டைல...
அது தெரியுது...சைதாப்பேட்டைல ... எங்க இருக்க
பக்கத்துலதாண்ட இருக்கேன் . வந்திடுறேன் என்றேன் .
எனக்கு பார்சல் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தேன். சிறிது நேர நடைக்கு பிறகு வீட்டிற்கு அருகே வந்து விட்டேன். முதல் தளத்தில் வீடு. மாடிப் படிகளில் ஏறினேன்.
எதிரே ஒரு பெண் இறங்கி வந்து கொண்டிருந்தாள். யாராக இருக்கும் இந்த பெண் என்ற யோசனைகளோடு படியேறினேன். ஒருவேளை இரண்டாம் தளத்தில் குடியிருக்கும் முஸ்லீம் வீட்டிற்கு வந்து இருக்கும். பார்க்க அப்படித்தான் தெரிந்தது. கை நிறைய வளையல். இன்னும் கேட்கும் கொலுசு ஒலி. காற்றில் மிதந்து செல்லும் மல்லிகை வாசம். மினு மினுக்கும் வெண்ணிற புடவை. அழகாவே இருந்தா.
கதவு திறந்து கிடந்தது.வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முகம் கழுவி கொண்டிருந்தான் மாரி . சட்டையை அணிந்து கொண்டு, டேய் சாப்பிட போறேன் என்றான். அதற்குள் இரண்டு முறை அவனுடைய மொபைல் அடித்து நின்றது.
அப்பொழுதுதான் அவன் முகத்தைப் பார்த்தேன். எதுவோ மின்னுவது போல தோன்றியது. என்னடா என்று கேட்பது நாகரீகமாக இருக்காது என்பதால், சற்று தள்ளி வந்து நன்றாக விளக்கு வெளிச்சத்தில் பார்த்தேன். சந்தேகம் இல்லாமல் அது ஜமிக்கி பவுடர்தான். அந்த பொண்ணு புடவையிலும் இந்த மினுமினுப்பு தான் பார்த்தேன். அதற்குள் அவன் சென்றிருந்தான்.
அவ புடவைல இருந்த ஜமிக்கி எப்படி இவன் முகத்துக்கு வந்துச்சு... என்ன எழவ பண்ணுனானோ...தெரியல...
சிறிது நேரத்தில் ராமு வந்தான். இன்னொரு ரூம்மேட்.
அவனிடம் மெதுவாக ஆரம்பித்தேன். " டேய் , ஆபிஸ் பக்கத்துல ரூம் இருக்குன்னு சொன்னாங்க . அங்க போய்டலாம்னு இருக்கேன்"
"அப்படியா ...உனக்கு எது வசதியோ அத பாத்துக்கடா ...என்ன நான்தான் வேற ரூம்மேட் பாக்கணும் " என்றான்.
மாரி என்கிட்டே ஒரு வார்த்த சொல்லி இருந்தா நானே வெளில போயிருப்பேன்.என்கிட்டே உண்மையா இருக்கணும்னு அவனுக்கு ஏனோ தோன்றவில்லை.
சமயத்துல நானும் அப்படி உண்மையா இருந்திருக்க மாட்டேன் போல...
தூங்க சென்றபொழுது, நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது " சூதனமா இருக்கணும் தம்பி...". ஆனா.. எனக்குத்தான் தூக்கமே வரலை.

அம்பாலிகா

கலைந்து

கிடக்கும்

மனதை

அடுக்கி வைக்கும் 

புத்தகம்...

ஒளிந்து

கிடக்கும்

மனதை

ஒளிரச் செய்யும்

கவிதை...

விழுந்து

கிடக்கும்

மனதை

நடக்கச் செய்யும்

நம்பிக்கை...

உடைந்து

கிடக்கும்

மனதை

இணைத்து வைக்கும்

காதல்...

அழிந்து

கிடக்கும்

மனதை

துளிர்க்கச் செய்யும்

நட்பு...

விளைந்து

கிடக்கும்

மனதை

அறுவடை செய்யும்

உலகம்....

வியாபார உலகம்...

Monday, October 3, 2011

இராஜராஜேஸ்வரி

விரிந்து

கிடக்கும் வானம்

பிரித்துப்

பெய்யும்

மழை!

-----------------------

நிராகரிப்பின்

வலியுணரும்

மனிதர்களின்

இரவுகளை

நிறைத்திருக்கும்

நட்சத்திரங்கள்....

-------------------------

நினைவுகளால்

உருவான

சிலுவையில்

அறைந்திட்ட

இயேசுவே

காதல்....

---------------------------

காரணங்களால்

நிறைந்த

வீடுகள்....

மனிதர்களால்

பிரிந்து போனது!

--------------------------

தனிமை

சிறையிலிருக்கும்

ஆயுள்கைதிகளின்

மிகப்பெரியக்

குற்றம்

நேசித்தல்......

Wednesday, September 28, 2011

ஆராத்ரிகா

நகரங்கள்

மாநகரங்களை

கிராமங்கள்

குக்கிராமங்களை

இணைக்கும் 

சாலைகள்

பயணிக்கும்

இடங்களும் 

பயணிப்பவர்

இடங்களும்

எப்பொழுதும் ஒன்றாகவே

இருப்பதில்லை...

வளைவு, நெளிவுகளும்

மேடு பள்ளங்களும்

இல்லாத சாலைகளை

கண்டடைவது எளிதல்ல....

பெரும்பான்மை 

புறவழிச் சாலைகள்

ஒதுக்கிச் செல்லும்

சிற்றூர்களை,

சேரிகளை....

இறந்துபோன

மனிதர்களோ

விலங்குகளோ

அரூபமாய் 

நடமாடக்கூடும்

சிலஇடங்களில்....

ஆலயங்களை 

சுடுகாடுகளை 

நீரோடைகளை 

சாக்கடைகளை 

கடந்து செல்லும்

சாலைகள்

வாழ்க்கை குறித்தான

தத்துவங்களை 

உணர்த்திச் செல்லும்...

சாலைகளைப் போன்று

விபத்து குறித்தான 

எச்சரிக்கை 

அறிவிப்புகளோடு இல்லை 

பெண்கள்... 

Tuesday, September 27, 2011

விவிதா

திறந்து கிடக்கும்

சாளரங்களின்

வழியே அதிகாலைப்

பொழுதுகளில்

நுழைந்துவிடும்

நினைவுகள்

உறக்கத்தை

கலைத்துவிடும்....

திடுக்கிடும்

நிமிடங்களில்

அதிகரிக்கும்

விடியாத பொழுதுகள்

உணர்த்திச் செல்லும்

முன்னரே நீ

விழித்துக் கொண்டதை....

Monday, September 26, 2011

வகீதா

அடர்ந்த

பனிமூடிய

புல்வெளிகளில்

தனித்துக் கிடந்த

நாளொன்றில்

கருத்திருந்தது

ஆகாயம்....

இதயங்களை

மறைத்திருந்த

கிரகணங்களில்

ஒளிந்திருந்தது

நம்பிக்கையின்மை...

வனங்களை

மறைத்திருக்கும்

இலைக்கூட்டம்

நினைவுகளில்

விழும்....

நிறைந்த

குற்றச்சாட்டுகளில்

தனியாக

அழுத நினைவுகள்....

பள்ளத்தாக்குகளின்

அபாயகரமான

செங்குத்துச்

சரிவுகளில்

வேறொருவரும்

கேட்டறியாத

இசைக்குறிப்பின் ஒலி

தனித்துயேறும்

வலிமையறச் செய்யும்...

அகன்ற பரப்புகளில்

சுற்றியிருக்கும்

வெற்றிடங்களில்

தனித்தே கடந்து செல்லும்

வாழ்க்கை...

விரிவடையும்

பரப்புகளில்

நசுக்கப்படும்

நம்பிக்கைகள்

மெல்ல இறந்துவிடும்...

வசந்தகாலத்தின்

மெல்லிய மூச்சுக்

காற்றின் பகிர்ந்து

கொள்ளப்படாத

ஆன்மா

தனிமையில் வெட்கும்

நீயின்றி....

விஷ்மயா

காதலியை

உருவாக்கிய

கவிதைகளும்

கவிதைகளை

உருவாக்கிய

காதலியும்

சந்தித்திராத 

புள்ளியொன்றில்

பயணிக்கும்

முழுமையற்ற 

நேசம்.....

இறந்துபோன 

நினைவுகளை

கல்லறைக்குள்

புகுந்து

உயிர்ப்பிக்கும்

தருணங்கள்

இறந்தவனின்

கடைசி 

கண்ணீர்த்துளியொன்று 

வரைந்த ஓவியம்...

Friday, September 23, 2011

அஷிர்தா

பெருங்கோப  

அருவியாய்...

தெள்ளிய

நீரோடையாய்...

அமைதியான

நதியாய்...

சலனச்

சமுத்திரமாய்...

அழகான

கால்வாய்களாய்...

சமயங்களில்

சாக்கடையாய்...

இருக்கக்கூடும்

கவிதைகளோ...

மனிதர்களோ...

அகலிகை

மனிதர்களைப்

புறக்கணித்த

மிருகம்

வரைந்த ஓவியமொன்று

மனிதர்களைப் போலவே...

செல்ல நாய்கள்

கடித்துக் குதறிய

அன்பு வார்த்தைகள்...

விளைநிலங்களை

வீட்டுமனைகளாக்கும்

நிகழ்வில்

சினங்கொண்டு வெளியேறிய

நிலத்தடி நீர்..

வெள்ளைப் பூக்களைத்

தேடியலைந்த

பெண்ணொருத்தி

கண்டடைந்த நாளொன்றில்

கைம்பெண்ணாய்...

புனிதங்களை

பலாத்காரம் செய்த

மனிதங்கள்...

ஒப்பீடுகளின்

இறுதியில்

குறைத்தே மதீப்பீடடையும்

மனிதனை மரணம்

சமன்செய்யும் இன்ன பிறரோடு...

சிங்கங்களை

பூனையாக்கும்

மனிதர்களைத் தின்றுவிடும்

குற்றவுணர்ச்சியை 

பரமபிதாவும்

பரிசுத்த ஆவியும்

பரிகாசிக்கக்கூடும்...

மனிதர்கள்

ஆக்கிரமிக்கும்

கடவுள்கள்

இரத்த ருசியறிந்து 

மிருகமாய்

உலவத்தொடங்கும்...

சுயசரிதையின்

இறுதிப்பக்கங்களில்

காறி உமிழ்வதற்கு 

ஒருவருமில்லை...

சுமந்து திரியும்

அழுத்தங்கள் 

வெடித்துச் சிதறும்

பயணங்களில்,

தசைத் துணுக்குகளை

மென்று துப்புவதற்கு

யாருமில்லாத 

எச்சமாய் மிஞ்சியிருப்பேன்

ஏதேனும்

ஓர் இதயத்தில் முழுமையாய்...

Thursday, September 22, 2011

இஷா

துரத்தப்படும்

இடங்களில்

நிலைத்திருக்கும்

உன்னிருப்பு...

அருவியாய்

விழுந்து

நதியாக  ஓடி

கடலில் கலந்திடும் உன்னை,

அடையாளங்கள்

வடிவங்கள் மற்றும்

சக்திகளைவிட  உயர்ந்த

உன்னைக் காற்று

என்ன செய்யக்கூடும்....

சங்கிலிகளில்

கட்டுண்டிருக்கும்

நாய்கள்

ஊளையிடும் துயரத்தில்...

மிளிரும் தோல்களில்

எலும்புகளிலும்

தசைகளிலும்

உதிரத் துளிகளிலும்

கண்டறியக்கூடும் உன்னை...

நிகழ்ந்துவிடாத

மனிதனாய்

இசைக்கப்படாத

பாடலாய்

தியானிக்கும்

நாட்களில்

புதிதாய் இருக்கிறது

பிறப்பு...

பிரதிபலிக்கும்

புனிதமற்ற மனித

பிம்பங்கள்

அச்சுறுத்தும்...

நீயல்லாத

மூன்றாம் மனிதனாகும்

வழியில் உன்

இறப்பின் தொடக்கம் நான்...

Wednesday, September 21, 2011

மஞ்சுபார்கவி

காற்றில்

மிதப்பது போன்று

மென்மையாய் இருப்பதில்லை

வாழ்க்கை...

காதலியைப்

பிரித்துவிடும்

நண்பன்...

சகோதரனைக்

கொன்றுவிடும்

தாய்...

கடவுளைத்

தின்றுவிடும்

குழந்தைகள்...

தந்தையை

புணரும்

வேசி..

பூக்களில்

உறங்கும்

கனவுகள்...

காயங்களில்

ஒளிந்திருக்கும்

அச்சம்...

எது

நிமித்தமேனும்

உறைந்துவிடும்

மனிதர்கள்

இறுதிவரை

இளகுவதில்லை....

மாற்றியழிக்க

முடியாத வலிகள்

நினைவுகளாய் இப்பொழுது...

அலைகளில்

பயணிக்கும்

நினைவுகள்

என்றாவதொருநாள்

கரையொதுங்கும்

இறந்தஉயிருடன்...

Tuesday, September 20, 2011

அனந்திதா

அடகு வைத்த  

வாழ்க்கை...

மீட்கமுடியாது

இறைவன்..

பறவைகள்

இரை தேடும்

நாட்களிலும்

கலந்திருக்கிறது

காதல்...

உயர்ந்திருக்கும்

மரங்கள் சொல்லும்

வடுக்களெல்லாம்

வாழ்க்கையென்று....

அடர்ந்த காரணங்களில்

ஒளிந்திருக்கும்

மனிதர்கள்

கலைத்துவிடும்

காலம்...

போர்முறை

வேறென்றாலும்

வேறுபடுவதில்லை

அமைதி...

இழந்துவிடுவோம்

என்பதன் அச்சம்

வாழச் சொல்கிறது...மீண்டும்...

கடவுளின் மீதான

நம்பிக்கை

பெருவாழ்வை

பரிசளிக்கும்

நம்பிக்கையிருந்தால்...

சந்தோஷி

உடைந்த 

அதிகாலைப் பொழுதொன்றில்

என் நினைவுகள் களவுபோனது...

தாயின் பாசத்திலும்

தந்தையின் அன்பிலும்

சகோதரனின் நம்பிக்கையிலும்

சகோதரியின் எதிர்பார்ப்பிலும்

எதிரிகளின் வஞ்சத்திலும்

நண்பர்களின் தோழமையிலும்

கண்டடையமுடியா நினைவுகளை

நீ கடத்திச் சென்றதை 

அறிந்து திடுக்கிட்ட தருணமொன்றில்

அலைபேசியில் அழைத்து 

நினைவுகளைத் தருவதற்கு

பிணயமாய் காதலைக் கேட்டாய்...

தொடர்புகள்

துண்டிக்கப்படும் நிகழ்வுகளில்

நினைவுகளைக் கடத்துவதுன் வாடிக்கை...

மஞ்சள் பூவிதழ்கள் 

விரவிக்கிடக்கும்

பச்சைப் புல்வெளிக்

கல்லறைத் தோட்டத்திற்கு

காதலை சுமந்தபடி வந்தடைந்தேன்...

கண்களில் முத்தமிட்டு

காதலைப் பருகி என் 

நினைவுகள மீட்டுத்தந்தாய் ....

மனிதர்களற்றப் பெருவெளியில்

அனைவருக்கும் 

சொல்லிவிட்டு உன்னிடம் வந்தேன்...

தொலைவைக் கடந்து

நடந்து சென்றது

பிரதிமையற்ற ஒன்று...

Monday, September 19, 2011

பகவதி

நட்சத்திரங்களைப்

புதைத்துவைத்த

மயானங்களில்

விளக்கென ஒளிரும் நிலவு...

ஒளியை மறைத்து

பனிமூட்டமாய்

நகரும் மேகங்கள்....

உறவுகள்

அழுத கண்ணீரென 

மழைத்துளி...

இடியொலியின்

நின்றுவிடாத மூச்சு 

மின்னலை அனுப்பி

வேவு பார்க்கும்...

இறந்துவிடாத 

நம்பிக்கையில்

நாளையேனும் 

பிறக்கக்கூடும்

என் எதிர்காலம்... 

Sunday, September 18, 2011

தமிழ்

உன்னைக் 

காண்பித்துச் 

சோறூட்டுவதும் 

என்னைக்

காண்பித்து 

அச்சுறுத்துவதும் 

குழந்தைகளுக்கு

பிரியமாகவே இருக்கிறது...  

Friday, September 16, 2011

மதி


என்றாவதொரு நாள்

மருத்துவமனையில்...

பயணங்களில்...

விபத்துகளில்...

கலவரங்களில்...

தொலைந்துவிடும் பொழுது

உண்மையாய் தேடக்கூடும்

வலியுணர்த்தும் என்

அருகாமையை...

அதிக்ஷா

சாலையை

கடந்துசெல்லும்

பார்வையில் மோதிடும்

வாகனங்கள்...

தடைப்படும் நொடிகளில்

தொடர்ந்திடும்

நிகழ்வுகள்...

தொடர்ந்திடும்

பார்வையில்

தூரங்கள் புலப்படும்...

கடந்து சென்ற வாகனம் 

திரும்பிவந்து மோதி

நிலைகுலையும் பார்வை...

ஆர்யா

உன் புன்னகைக்கு

காத்திருந்த பூக்கள்

உதிர்ந்துவிடும்

வெட்கத்தில்... 

Thursday, September 15, 2011

சேத்தனா

ஜன்னல் வழி

நுழைந்த காற்று

கூந்தல் கலைத்துச்செல்லும்...

நெற்றியில் தவழும்

கூந்தல் முடியொதுக்கி

கீழிறங்கும் கைகள்...

இடது கையெடுத்து 

மொத்தமாய் அள்ளி

வலது காதோரம் தள்ளிச்

செருகும்பொழுதுகளில்

காற்றில் களையும்

மேலாடை...

விரல்களில் நுழைந்த

கணையாழி இறங்க மனமின்றி...

சங்குபூ காதணி

நட்சத்திர மூக்குத்தியில் ஒளிரும்...

தொண்டைக்குழி இறங்கும் 

வியர்வைத்துளிக்கு

கொஞ்சமேனும்

அதிர்ஷ்டமிருக்கிறது...

கண்களின் உண்மையில் 

யாரெனத் தெரியாது...

உன்னோடு 

பேசும் தருணங்களில் 

காற்று கலைத்துவிடும்

என் கவனத்தை 

மீட்டெடுப்பது எவ்வாறு?

துருவிகா

சூல்கொண்ட

மழைமேகம்

பூக்களைப்

பொழியும்...

மழையில்

நனையும்

பூக்கள்

உதிர்த்துச்செல்லும்

மீண்டுமொரு மழைக்கான

பூக்களை...

தீக்ஷிதா

பெருவெளியின்

கருணையில்

நிரம்பிவழியும் - என்

பாத்திரம்..

வழிந்தோடும்

கருணைத் தழுவிச் செல்லும் 

தாவரங்களை

விலங்குகளை மற்றும்

மனிதர்களை...

வெறுப்பின் 

நிழல்தேடியும் 

விரவும் கருணை

தழுவிச் செல்லுமதன்

பாதங்களை...

வீசும் காற்றின் வேகம்

கடந்திருக்கிறது

இயலாமையின் பெருங்கோபம்...

கடந்து செல்லும்

காற்றோ, கருணையோ

எங்கேனும் நிரப்பிச் செல்லுமொரு

வெற்றுப்பாத்திரத்தை புதிதாய்...

ஓஜஸ்வினி

பூக்களை 

பிரசவிக்கும்

மழைத்துளி 

பெண்கள்...
-------------------------

இரவுகளில்

நடமாடும் பெண்கள்

நட்சத்திரங்கள்...
------------------------

பகலில்

நடமாடும் நட்சத்திரங்கள்

பெண்கள்...
-----------------------

காதலின்

ஆக்ரோஷம் 

கடந்துவரும்

காற்றின் பாதைகளில்

பூக்கள் மலர்வதில்லை....

-----------------------------

கூந்தல்

கலைந்த பெண்கள் 

ஆசை களைவதில்லை...

----------------------------

ஈரமில்லா 

பெண்களின்

மார்பில் பால் 

சுரப்பதில்லை...

Tuesday, September 13, 2011

இஷானா

மஞ்சள் வயல் வெளியின்
நடுவில் நின்றிருக்கும்
ஒற்றை மரமொன்றின்
பச்சை நிறமென
தனித்திருக்கும்
நினைவுகள்
மண்ணில் விழுந்திடாத
மழையின் முதல் துளி...

இஷிதா

இரவுகளில்

துளிர்க்கும்

இசைப்பாடல்களின்

சுகந்தம் பகலிலும்

நீண்டுவிடுகிறது...

காதலை சொல்லிச்சென்ற

பெண்ணொருத்தியின் கனவுகளில்

அரை நிர்வாணமாய்

ஆண்கள்...

விளக்குகள்

அணைந்திடாத

வீடுகளில்

குழந்தைகள்

உறங்குகின்றன...

படிக்கட்டுகளில்

ஏறிவரும் யாரும்

நிலாவைத் தொடுவதில்லை...

நெற்றியில் முத்தமிட்டு

நீரோடிய விழிகளோடு

கடைசியாய்

கட்டியணைத்த

நாளொன்றில் நீ

கையில் திணித்த

ஒற்றைரூபாயும்

தொலைந்து போனது

உன் நினைவுகளோடு...

பாசந்தி

அடுக்கக மனைகளில்

வசிப்பவன்

கனவுகளில்

விலங்குகள்

வருவதில்லை...

லக்ஷ்கி

மனதால்

திறந்து கொள்பவன் கடவுள்

மனதை

திறந்து கொள்பவன் மனிதன் ...

லூனஷா

பசியோடு 

இருக்கின்ற வீடுகள்

மனிதர்களைத் தின்றுவிடுகிறது...

மித்ரா

நெடுஞ்சாலைப் பாதையோரம் 

நடந்துசெல்லும்

அதிகாலைப் பொழுதுகளில் 

நிறைந்திருக்கும் கல்லறைக் கூட்டங்களில் 

வியாபித்திருக்கும் ஆத்மாக்கள்...

சிதறிக்கிடக்கும்

மஞ்சள் பூக்களை

மிதித்துச் செல்லும்

பெண்ணொருத்தியின்

நினைவுகளில்

நிழலாடும்

காதலனின் கவிதையொன்று....

கடந்து செல்லும்

பேருந்துகளின் வேகம்

அச்சுறுத்தும்...

எதிர் திசையில் நடந்து வரும் 

இதயங்களில்

மெய்யோ பொய்யோ 

இருக்கக்கூடும்...

அனைவருக்கும் 

அமைவதில்லை

ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை...

விளம்பரங்களைக் 

கொண்டுவரும் தேர்தல்

சுவர்களை அசிங்கமாக்கும்....

மனிதர்களைத் திரட்டி

இதயங்களை தின்றுவிடும் அரசியல்

ஒருவருக்கும் புரிவதில்லை 

பூரணமாக....

மரித்துவிடும் மனிதர்களின்

கடைசி நினைவுகளை

கண்டறியும் வித்தை

கடவுளுக்கு மட்டுமே 

கைவந்திருக்கிறது....

நம்பிக்கைகளைத் தகர்த்து

திடீரென நிகழும் மரணங்கள்

எளிதில் புரிவதில்லை - எனினும்

எப்பொழுதும் நினைவிலிருக்கிறது

என்றாவதொருநாள்

நான் இறந்துவிடுவேனென்று!

Sunday, September 11, 2011

தமனிகை


இரவுகளில் 

தவமிருந்து

வரமாய் பெற்ற 

கவிதையொன்று

எப்பொழுதும்

ஆயத்தமாயிருக்கிறது

மனிதர்களைக் 

குத்தி கிழித்து 

வார்த்தைகளால் 

கொன்று விடுவதற்கு....

வன்ஷிகா

இறைச்செய்தியோடு

வழிதவறிய தூதனை

ஆடுகள் தின்று செரிக்கும்

கலிகாலமொன்றில்

கண்டடையக் கூடும்

விலங்குகள் தேர்வுசெய்த 

கடவுளொன்றை....

மனிதம் தின்று

மதம் பிடித்தலையும்

கூட்டமொன்று

கடவுளை காவு கேட்கும்....

விரல்களைத் தாண்டி 

வளரும் நகங்களை

மென்று துப்பும்

உறவுகள் உரிமையை

இழந்தபின்னும்

ஊமையாய் நக்கிப் பிழைக்கும்

எச்சில் இலையை...

உச்சம் தொடாத 

வாழ்க்கையொன்றில்

மிச்சமாய் என்ன இருக்கும்? 

Tuesday, September 6, 2011

சம்ரித்தி

சொற்கள்

அடங்க மறுத்த

கவிதைகளும்...

கவிதைகள் நிராகரித்த

சொற்களும்...

சண்டையிட்டு 

சங்கமித்த 

ஓவியமொன்று

சொற்களும்

கவிதைகளுமின்றி

பூக்களின் நிறம் தரித்து

மலர்ந்திருந்தது 

மனிதர்களைப் போலன்றி... 

வேதிகா

உணர்வுகளை 

கொட்டித் தீர்த்த வார்த்தைகள் 

காதலைத் தேடித் திரிந்த

நாளொன்றில் 

உன்னை சந்திக்க கூடும்...

வெற்றுக் காகிதப் பரப்பில்

நிரப்பிய வார்த்தைகள் 

கவிதைகளென்று உன்னிடம் 

சண்டையிடக்கூடும்...

எதிர்கொள்ளும் நிகழ்வுகளில்

ஏதேனும் என்னை 

நினைவுபடுத்தக் கூடும்....

மின்னஞ்சல் கவிதைகளும்

வலைதள வாசிப்புகளும்

முகப் புத்தக விசாரணைகளும்

என் இருப்பை அறிவிக்க கூடும்...

வார்த்தைகள் தீர்ந்து போகும் 

நாளொன்றில் நீ வாசிக்க 

கொஞ்சமேனும் மிச்சமிருக்கும்

நீ வாழ்ந்திடாத என் வாழ்க்கை... 

Wednesday, August 17, 2011

ஸ்மிதா

தேவைகள்
தீர்மானிக்கும்
வாழ்க்கையில் 
தோல்விகள்
தேடலின்
தொடர்ச்சியே!

Tuesday, August 9, 2011

அலெக்சிவிளக்குகள் ஒளிரும்


மின் இரவுகளில்


துணைவனோடு நடந்து


செல்லும் பெண்கள்...

அன்பை தின்று


செறித்த காதல்


கொன்று குவித்த


மனிதக் கழிவுகள்...

காரணங்களை அசலாக்கி


சண்டையிட்டு பிரிந்தவளின்


அடைபடாத கடனாக


இறந்தவனின் வாழ்க்கை...
கதறி அழுதவளின்


குரலில் இறந்தவனின்


வலி உணர்த்தும் காதல்...

நம்பிக்கைகளை


வளர்த்திடாமல் நாகரீகம்


காத்திட்ட குற்றவாளியாய்


சுமக்கத் தொடங்கிய


இறப்பின் அர்த்தம்...

ஜனனம் சேர்த்திட்டஉறவுகளனைத்தும் தொடர்ந்திடாத  
மரணம்...


பிரிவதைப் போன்றுஎளிதல்ல...முற்றிலுமாய்இழந்துவிடுவது....