Monday, July 6, 2009

பௌலொ கொய்லோ

உலகில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் ஒருவரும், மிக நுட்பமான எழுத்துகளின் மூலம் தீவிர தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவருமான
பௌலொ கோய்லோ 1947 ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோவில் பிறந்தார்.அவருடைய தந்தை பெட்ரோஒரு பொறியாளர்.தாய் லிஜியா. தன்னுடைய ஏழாம் வயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற மதவழிபாடுகள், வழிபாட்டு கூட்டங்கள் அவரை முழுமையாக பள்ளிக்கூடத்தை வெறுக்கச் செய்தது.பள்ளிக்கூடத்தின் ஒதுக்குப் புறமான நடை பாதைகளில் திரிந்து கொண்டிருந்த அவருக்கு எழுதுவதே - எழுத்தாளான் ஆவதுதான் தனக்கான எதிர்காலம் என்ற உணர்வு தோன்றத் தொடங்கியது. தன்னுடைய இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த கவிதை இலக்கியப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றார். அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க பல சம்பவங்களுள் ஒன்று, அவர் எழுதி குப்பைத் தொட்டியில் எறிந்த கட்டுரையின் மூலம் அவருடைய சகோதரி சோனியா கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றது.
பௌலொவின் பெற்றோர்கள் அவரை பொறியாளர் ஆக்குவது என்ற கனவில் இருந்தனர். அவர் தீவிர இலக்கியவாதியாக மாறிக்கொண்டிருந்தார். கடுமையாக முயன்றும் பெற்றோர்களால் அவரை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியவில்லை. பெற்றோர்களுடைய கடும் எதிர்ப்பும், ஹென்றி மில்லர் எழுதிய "டிரோபிக் ஆஃப் கேன்சர்" என்ற புத்தகமும் அவரை தீவிர புரட்சியாளனாகமாற்றத் தொடங்கியிருந்தது. சமுக விதிகள், சம்பிரதாயங்கள் என்று சொல்லப் பட்டவைகளை கிண்டலும் கேலியும் செய்யத் தொடங்கினார். அவருடைய திடீர் செய்கை மாற்றங்களை கண்டு பயந்த பெட்ரோ, பௌலொவின் பதினேழு வயதில் அவரை மனநலக் காப்பகத்தில் சிகிச்சைக்காக இரண்டு முறை அனுமதித்தார். அங்கு அவருக்கு பல முறை மின்சார சிகிச்சை அளிக்கப் பட்டது.
சிகிச்சைக்கு பிறகு சிறி நாட்களில் பௌலொ நாடகக் குழுக்களுடன் இணைத்துக் கொண்டு பத்திரிக்கையாளனாக பணிபுரியத் தொடங்கினார். வசதி வாய்ப்புகள் குறைவான, சொகுசுகள் குறைவான மத்திய நடுத்தர மக்களின் எண்ணங்களில் நாடகக் குழுக்கள் குற்றங்களின் சொர்க்க புரியாகத் தெரிந்த காலமது. பௌலொவின் நடத்தை குறித்து பெரிதும் கவலையுற்ற பெற்றோர்கள் அவரை மூன்றாவது முறையாக மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை முடிந்து வெளியில் வந்த பௌலொ முற்றிலும் தன்னுடைய உலகத்தை இழந்தவராய், தொலைந்து போயிருந்தார். என்ன செய்வதென்று தெரியாத பெற்றோர் இறுதியாக வேறொரு மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றனர். பௌலொவினை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு சிகிச்சை தேவை இல்லை, அவர் மனநிலை பாதிக்கப் பட்டவர் அல்ல, அவருக்கு தேவையானது வாழ்க்கையினை எதிர் கொள்ளும், அணுகும் முறை மட்டுமே என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பினார். அந்த அனுபவங்களின் அடிப்படையில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய புத்தகம் "வெரோனிகா டிசைட்ஸ் டு டை".
அதற்குப் பிறகு தன் படிப்பைத் தொடர்ந்த அவர், மீண்டும் நாடகக் குழுக்களுடன் இணைத்துக் கொண்டார். அறுபதுகளில் உலக வரைபடத்தில் பரவலாகயிருந்த ஹிப்பி இயக்கம் பிரேசிலிலும் வேரூன்றத் தொடங்கிய பொழுது பௌலொவும் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார். நீளமாக தலை முடியை வளர்த்துக் கொண்டு , இராணுவம் ஆட்சி புரிந்த பிரேசிலில் அடையாள அட்டையின்றி திரிந்தார். சிலகாலம் போதை பொருளுக்கு அடிமைபட்டுக் கிடந்தார். எழுது மட்டுமே தன் வாழ்வின் உத்வேகம் என்று கருதிய அவர் தொடங்கிய இதழ் ஒன்று இரண்டு பதிப்புகளுடன் நின்று போனது.

அந்த கால கட்டங்களில் ராக் இசையில் குறிப்பிடத்தக்கவரான ரௌல் தன் இசைக்கு பாடல் எழுத அழைப்பு விடுத்தார்.அவர்கள் வெளியிட்ட இரண்டாவது இசைத்தட்டு ஐந்து மில்லியன் எண்ணிக்கையினைத் தாண்டி விற்றது. பௌலொ அதிகம் சம்பாதிக்கத் தொடங்கினார். ரௌல் உடன் இணைந்து 60 பாடல்களுக்கு மேல் எழுதினார். அவர்களுடைய பங்கு பிரேசில் ராக் இசையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. இருவரும் 1976 வரை இணைந்து பணிபுரிந்தனர். 1973 ஆம் ஆண்டு முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு , அமானுஷ்ய செய்முறைகளை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அப்பொழுது அதிகமாக சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் வெளியிட்ட நகைச்சுவை பட இதழ்கள் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியதால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறிது காலங்களில் ரௌல் வெளியில் வந்தார். அந்த இதழ்களுக்கு மூளையாக பௌலொ செயல்பட்டதால் நீண்ட காலம் சிறையில் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளியில் வந்த சில நாட்களுக்குள் தெருவில் செல்லும்பொழுது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்ரவதை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தன்னை மனநிலை பாதிக்கப் பட்டவன் என்று கூறி தன்னை தானே சித்ரவதை செய்து கொள்ளத்தொடங்கினார். அதனை பார்த்த அவர்கள் அவரை விடுதலை செய்து அனுப்பி வைத்தனர். இந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 26 வயதுக்குள் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் அவருக்கு போதுமான அனுபவமாக இருந்தது. அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்பினார். ஒரு இசைத்தட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலைப் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1977 ஆம் ஆண்டு இலண்டனுக்கு சென்றார். அங்கும் பெரிதாக எதையும் எழுதி வெற்றி பெற முடியாமல் அடுத்த ஆண்டே பிரேசிலுக்கு திரும்பினார். மீண்டும் வேறொரு நிறுவனத்தில் மூன்று மாதங்கள் பணிபுரிந்தார். தன் மனைவியை விட்டு பிரிந்து சில நாட்களில் தன் வேலையை இராஜினாமா செய்தார்.
1979 aam ஆண்டு தன் சிறு வயது தோழியை சந்தித்தார். அவரது பெயர் கிருஷ்டினா . சில காலம் கழித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு விஜயம் செய்தனர். ஜெர்மனியில் இருந்த நாஜீ படைகளின் தச்சாவ் சித்ரவதை முகாமும் அவர்களின் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. அங்கு அவர் சந்தித்த ஒரு மனிதரின் மூலமாக வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை கிடைத்தது. அதே மனிதரை இரண்டு மாதங்கள் கழித்து ஒரு தேநீர் கடையில் , ஆம்ஸ்டர்டாமில் சந்தித்து நீண்ட நேரம் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார். அந்த மனிதர் யாரென்று பௌலொ இதுவரை தெரிவித்தது இல்லை. பௌலொவினை கத்தோலிக்க மதத்துக்கு திரும்பச் சொன்னார். பௌலொ கிருத்துவ மதத்தில் இருக்கும் சைகைகள் பற்றி படிக்கத் தொடங்கியிருந்தார். அந்த மனிதர் பௌலொவினை சந்தியாகு சாலையில் பயணிக்க சொன்னார்.(ஸ்பெயினுக்கும் பிரான்ஸ்க்கும் இணைப்பாக இருக்கும் ஒரு பயணிகள் வழிச்சாலை). 1987 ஆம் ஆண்டு அந்த பயணத்தை முடித்த பிறகு அவர் எழுதிய முதல் புத்தகம் " The Pilgrimage". பயணங்களில் நிகழ்ந்த சம்பவங்கள், சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் அசாதரண நிகழ்வுகள் பற்றியும் எழுதி இருந்தார். பிரேசிலிய பதிப்பக வெளியிடாக வந்த அந்த புத்தகம் வெகு சில மதிப்பீடுகளே பெற்றது எனினும் கொஞ்சம் நன்றாக விற்று தீர்ந்தது.
அதற்க்கு பிறகு 1988 யில் அவர் எழுதிய புத்தகம் "The Alchemist". வாழ்க்கையை வேறொரு தளத்தில் பார்த்த புத்தகம். அவருடைய பதினோரு வருட வாசிப்புகள் அடங்கியது அந்த புத்தகம். 900 பிரதிகள் மட்டுமே அச்சான அந்த புத்தகத்தை மீண்டும் பதிப்பிக்க அந்த பிரசுரம் தயாராக இல்லை என்று கூறியது. தன் கனவுகள் , ஆசைகள், விருப்பங்கள், இலட்சியங்கள் குறித்த தேடலை பௌலொ நிறுத்தவில்லை. இரண்டாவது வாய்ப்பாக வேறொரு பெரிய பிரசுரம் 1990 யில் "Brida" புத்தகத்தை வெளியிட்டது. மனிதர்கள் சுமந்து கொண்டிருக்கும் வெகுமதிகள் குறித்தான ஒரு கதை. அது அவருடைய முந்திய புத்தகங்களுக்கும் பெரிய அடையாளத்தை கொடுத்தது.அதன் பிறகு "The Alchemist" புத்தகம் அடைந்த உயரம் அனைவருக்கும் தெரிந்ததே.
பௌலொ கோய்லோவின் புத்தகங்கள் இனம், மொழி, மதம், நாடு கடந்து பெரும்பாலான, பரவலாக பேசப்படும் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்துகிற ஒரு கலாச்சார நிகழ்வு தான் பௌலொ கொய்லோ. வாழ்க்கையை வேறொரு தளத்தில், பரிமாணத்தில் , கோணத்தில் சிந்திக்க செய்கின்ற ஆளுமை உண்மையில் அவர் எழுத்துக்கு உண்டு என்பதில் பெரும்பாலோனோருக்கு மாற்றுக் கருத்திருக்க முடியாது.
அவருடைய எழுத்துக்களில் சில...
மனிதன் தன் விதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது.
நாம் விரும்புவதை நோக்கிய பயணத்தில் துயரங்கள் நிலைத்திருக்க முடியாது.
கனவுகளை நிறுத்தி விடாதீர். சைகை நிகழ்வுகளை பின் தொடருங்கள்.
உன் காயங்கள் உனக்கு உதவி செய்யும்.
மனதும் உடலும் புதிய சவால்களுக்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

1 comment:

  1. எதிர்பாராத தருணத்தில் இப்படி ஒரு கட்டுரையை அளித்தமைக்கு நன்றி! The Alchemist மட்டும் நான் படித்திருக்கிறேன். பௌலோ கோய்லோ பற்றிய அடிப்படை அறிவு இந்த ஒரு புத்தகத்திலேயே நமக்குக் கிடைத்து விடும். நம் பாதையை மாற்றக்கூடிய மந்திர எழுத்துகள் அவரிடம் இருக்கின்றன.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete