Sunday, July 12, 2009

அனுஷ்கா

குளத்தில் வீசிய
நினைவுகளின்
அதிர்வுகள் வளையங்களாய்
நகர்கிறது...
துள்ளி குதிக்கும்
பால்ய காலத்து
நினைவுகள்
படித்துறை மீன்களை
ஒத்திருக்கிறது...
கரையில் அலையும்
நண்டுக்கு வழிகாட்ட
யாருமில்லை...
எருமை மாடு குளிப்பாட்டி
கால் கழுவி குளித்து
புறப்படும் பொழுதுகளில்
குளத்தில் இருக்கிறது
பாம்பு பற்றிய அச்சம்...

Friday, July 10, 2009

ஹிரண்மயி

விருப்பமானது

இல்லையெனினும்

புறப்படும் நேரமிது...

வாசித்துறங்கும் பொழுதுகளில்

உன்னோடு பேசிக்கொண்டு

இருப்பதற்காக

சில வார்த்தைகளையும்

நிறைய ப்ரியத்தையும்

விட்டுச் செல்கிறேன்...

யாருமற்ற

மஞ்சள் பூ மரக்காடுகளில்

அமானுஷ்யம் பரவும்

மலை முகடுகளில்

இசைத்தபடி

நடனமிடும் அருவிகளில்

உன்னோடு பேசிக் கொள்வேன்...

கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்

இன்னும் இடைவெளியை

அதிகரித்து விடவேண்டாமென்று...

Thursday, July 9, 2009

அமிஷா - தனிஷா

மெலிதாய்

புலர்ந்திருக்கிறது பொழுது

சூரிய ஒளிக்கதிர்களின்

தழுவலில் விழித்துக்

கொள்கிறது சமவெளி சரிவுகளில்

படர்ந்திருக்கும் அருகம் புல்

வடக்கிலிருந்து

தெற்கு நோக்கி செல்கிறது

குதிரை வண்டி சுமைகளோடு...

குரைத்தபடி

ஓடிக் கடக்கிறது நாயொன்று

பாலத்தை...

வெளிச்சம் படாமல்

வளர்கிறது

கட்டி முடிக்காத கோட்டை...

இலைகள் உதிர்ந்து

நிற்கிறது கருவேல மரம்...

கருமையாய் நகருகிறது

அடர்ந்த மேகம்...

நீ வந்து நிரப்புவதற்காக

எஞ்சியிருக்கிறது

கொஞ்சம் இடம்...

Wednesday, July 8, 2009

வினோதினி

உறக்கம் வராத

இரவுகளில் கூடவே

வருகிறது குல்ஃபி ஐஸ்

மணி சத்தம்...

பக்கத்து வீட்டுப்

பூனைக்குட்டி

கடந்து செல்கிறது

மனிதர்களற்ற தெருவின்

இடது புறத்திலிருந்து...

இருட்டாக இருக்கிறது

சோடியம் விளக்குகளின்

மேற்புறம்...

மல்லிகைப் பூக்களோடு

வாசல்படியில் வந்தமர்ந்த

பெண்ணொருத்தியின்

நினைவுகளில் யாரோ...

Tuesday, July 7, 2009

டோனா

நேற்றிரவு
வானம் இன்றும்
இருக்கிறது
நட்சத்திரங்களற்று...


பர்ஸானா

அப்பா அம்மா

கட்டிய வீடு

உள்ளூரில் இருக்கிறது

ஒரு ஏக்கர் நிலம்

அக்கா, தம்பியோடு

எனக்கும் பங்கிருக்கிறது

இறந்து பதினான்கு ஆண்டுகள்

கழிந்த பிறக்கும்...

ரெபேக்கா

நாள்தோறும்

உதிக்கும் சூரிய

ஒளிபிழம்புகளில்

விடிந்துவிடுகிறது

பொழுது...

இன்னும்

விடிவதாக இல்லை

எண்ணியிருக்கும்

வாழ்க்கை...

ஷாந்தி

உயர்ந்து
தாழ்ந்து
உயருகிறது
மாநகராட்சி
குழாயின்
கைப்பிடி...
கண்ணீர்தான் வருகிறது
நள்ளிரவுகளில்...

இந்திரா

வரும்

இன்று இரவு

இரவில் மழை

மழையில் உறக்கம்

உறக்கத்தில் கனவு

கனவில் நீ

விடியத் தொடங்கியிருக்கும்...

Monday, July 6, 2009

நிவேதிதா

உறக்கம் கலையாத

அழகுடன் திறக்க

வருவாயென

கதவு தட்டிக்

கொண்டிருக்கிறது

அதிகாலை காற்று...

வனிதா

தினமும்
உறங்கச் செல்லும் முன்
இறந்துவிடும்
மனிதர்கள் மறுநாள்
அதிகாலைப் பொழுதுகளில்
பிறந்துவிடுகிறார்கள்
புதிதாய்...

அஸ்ரிதா

சற்று முன்பாக
நீ வந்து சென்றதாய்
சொன்னார்கள்...
சல்லடையில்
கிடைக்கவில்லை
உன் கால்தடம்....

செல்லத்தாய்

விதி எழுதியவனை

காணச் சென்றேன்

ஓரமாய் நின்று

அழுதுகொண்டிருந்த

உன்னைத்தான் காண்பித்தார்கள்

கடவுளென்று...

நானும் தயாரானேன்

உன்னோடு அழுவதற்கு...

குருவம்மா

பொய்யும் புரட்டும் உடைத்தாயின் இல்வாழ்கை

மையல் தீர்ந்த மரணமது.

யவனிகா

பிறமனிதர்கள்
யாருமற்று நீ உறங்கும்
நாளொன்றின்
பின்னிரவில்
விழித்தெழச்செய்யும்
துர்சொப்பனமொன்றில்
மரணம் தன் வரலாறு
சொல்லும்
நான் கேட்டுக்கொண்டிருப்பேன்...

பௌலொ கொய்லோ

உலகில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் ஒருவரும், மிக நுட்பமான எழுத்துகளின் மூலம் தீவிர தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவருமான
பௌலொ கோய்லோ 1947 ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோவில் பிறந்தார்.அவருடைய தந்தை பெட்ரோஒரு பொறியாளர்.தாய் லிஜியா. தன்னுடைய ஏழாம் வயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற மதவழிபாடுகள், வழிபாட்டு கூட்டங்கள் அவரை முழுமையாக பள்ளிக்கூடத்தை வெறுக்கச் செய்தது.பள்ளிக்கூடத்தின் ஒதுக்குப் புறமான நடை பாதைகளில் திரிந்து கொண்டிருந்த அவருக்கு எழுதுவதே - எழுத்தாளான் ஆவதுதான் தனக்கான எதிர்காலம் என்ற உணர்வு தோன்றத் தொடங்கியது. தன்னுடைய இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த கவிதை இலக்கியப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றார். அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க பல சம்பவங்களுள் ஒன்று, அவர் எழுதி குப்பைத் தொட்டியில் எறிந்த கட்டுரையின் மூலம் அவருடைய சகோதரி சோனியா கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றது.
பௌலொவின் பெற்றோர்கள் அவரை பொறியாளர் ஆக்குவது என்ற கனவில் இருந்தனர். அவர் தீவிர இலக்கியவாதியாக மாறிக்கொண்டிருந்தார். கடுமையாக முயன்றும் பெற்றோர்களால் அவரை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியவில்லை. பெற்றோர்களுடைய கடும் எதிர்ப்பும், ஹென்றி மில்லர் எழுதிய "டிரோபிக் ஆஃப் கேன்சர்" என்ற புத்தகமும் அவரை தீவிர புரட்சியாளனாகமாற்றத் தொடங்கியிருந்தது. சமுக விதிகள், சம்பிரதாயங்கள் என்று சொல்லப் பட்டவைகளை கிண்டலும் கேலியும் செய்யத் தொடங்கினார். அவருடைய திடீர் செய்கை மாற்றங்களை கண்டு பயந்த பெட்ரோ, பௌலொவின் பதினேழு வயதில் அவரை மனநலக் காப்பகத்தில் சிகிச்சைக்காக இரண்டு முறை அனுமதித்தார். அங்கு அவருக்கு பல முறை மின்சார சிகிச்சை அளிக்கப் பட்டது.
சிகிச்சைக்கு பிறகு சிறி நாட்களில் பௌலொ நாடகக் குழுக்களுடன் இணைத்துக் கொண்டு பத்திரிக்கையாளனாக பணிபுரியத் தொடங்கினார். வசதி வாய்ப்புகள் குறைவான, சொகுசுகள் குறைவான மத்திய நடுத்தர மக்களின் எண்ணங்களில் நாடகக் குழுக்கள் குற்றங்களின் சொர்க்க புரியாகத் தெரிந்த காலமது. பௌலொவின் நடத்தை குறித்து பெரிதும் கவலையுற்ற பெற்றோர்கள் அவரை மூன்றாவது முறையாக மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை முடிந்து வெளியில் வந்த பௌலொ முற்றிலும் தன்னுடைய உலகத்தை இழந்தவராய், தொலைந்து போயிருந்தார். என்ன செய்வதென்று தெரியாத பெற்றோர் இறுதியாக வேறொரு மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றனர். பௌலொவினை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு சிகிச்சை தேவை இல்லை, அவர் மனநிலை பாதிக்கப் பட்டவர் அல்ல, அவருக்கு தேவையானது வாழ்க்கையினை எதிர் கொள்ளும், அணுகும் முறை மட்டுமே என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பினார். அந்த அனுபவங்களின் அடிப்படையில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய புத்தகம் "வெரோனிகா டிசைட்ஸ் டு டை".
அதற்குப் பிறகு தன் படிப்பைத் தொடர்ந்த அவர், மீண்டும் நாடகக் குழுக்களுடன் இணைத்துக் கொண்டார். அறுபதுகளில் உலக வரைபடத்தில் பரவலாகயிருந்த ஹிப்பி இயக்கம் பிரேசிலிலும் வேரூன்றத் தொடங்கிய பொழுது பௌலொவும் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார். நீளமாக தலை முடியை வளர்த்துக் கொண்டு , இராணுவம் ஆட்சி புரிந்த பிரேசிலில் அடையாள அட்டையின்றி திரிந்தார். சிலகாலம் போதை பொருளுக்கு அடிமைபட்டுக் கிடந்தார். எழுது மட்டுமே தன் வாழ்வின் உத்வேகம் என்று கருதிய அவர் தொடங்கிய இதழ் ஒன்று இரண்டு பதிப்புகளுடன் நின்று போனது.

அந்த கால கட்டங்களில் ராக் இசையில் குறிப்பிடத்தக்கவரான ரௌல் தன் இசைக்கு பாடல் எழுத அழைப்பு விடுத்தார்.அவர்கள் வெளியிட்ட இரண்டாவது இசைத்தட்டு ஐந்து மில்லியன் எண்ணிக்கையினைத் தாண்டி விற்றது. பௌலொ அதிகம் சம்பாதிக்கத் தொடங்கினார். ரௌல் உடன் இணைந்து 60 பாடல்களுக்கு மேல் எழுதினார். அவர்களுடைய பங்கு பிரேசில் ராக் இசையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. இருவரும் 1976 வரை இணைந்து பணிபுரிந்தனர். 1973 ஆம் ஆண்டு முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு , அமானுஷ்ய செய்முறைகளை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அப்பொழுது அதிகமாக சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் வெளியிட்ட நகைச்சுவை பட இதழ்கள் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியதால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறிது காலங்களில் ரௌல் வெளியில் வந்தார். அந்த இதழ்களுக்கு மூளையாக பௌலொ செயல்பட்டதால் நீண்ட காலம் சிறையில் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளியில் வந்த சில நாட்களுக்குள் தெருவில் செல்லும்பொழுது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்ரவதை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தன்னை மனநிலை பாதிக்கப் பட்டவன் என்று கூறி தன்னை தானே சித்ரவதை செய்து கொள்ளத்தொடங்கினார். அதனை பார்த்த அவர்கள் அவரை விடுதலை செய்து அனுப்பி வைத்தனர். இந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 26 வயதுக்குள் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் அவருக்கு போதுமான அனுபவமாக இருந்தது. அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்பினார். ஒரு இசைத்தட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலைப் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1977 ஆம் ஆண்டு இலண்டனுக்கு சென்றார். அங்கும் பெரிதாக எதையும் எழுதி வெற்றி பெற முடியாமல் அடுத்த ஆண்டே பிரேசிலுக்கு திரும்பினார். மீண்டும் வேறொரு நிறுவனத்தில் மூன்று மாதங்கள் பணிபுரிந்தார். தன் மனைவியை விட்டு பிரிந்து சில நாட்களில் தன் வேலையை இராஜினாமா செய்தார்.
1979 aam ஆண்டு தன் சிறு வயது தோழியை சந்தித்தார். அவரது பெயர் கிருஷ்டினா . சில காலம் கழித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு விஜயம் செய்தனர். ஜெர்மனியில் இருந்த நாஜீ படைகளின் தச்சாவ் சித்ரவதை முகாமும் அவர்களின் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. அங்கு அவர் சந்தித்த ஒரு மனிதரின் மூலமாக வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை கிடைத்தது. அதே மனிதரை இரண்டு மாதங்கள் கழித்து ஒரு தேநீர் கடையில் , ஆம்ஸ்டர்டாமில் சந்தித்து நீண்ட நேரம் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார். அந்த மனிதர் யாரென்று பௌலொ இதுவரை தெரிவித்தது இல்லை. பௌலொவினை கத்தோலிக்க மதத்துக்கு திரும்பச் சொன்னார். பௌலொ கிருத்துவ மதத்தில் இருக்கும் சைகைகள் பற்றி படிக்கத் தொடங்கியிருந்தார். அந்த மனிதர் பௌலொவினை சந்தியாகு சாலையில் பயணிக்க சொன்னார்.(ஸ்பெயினுக்கும் பிரான்ஸ்க்கும் இணைப்பாக இருக்கும் ஒரு பயணிகள் வழிச்சாலை). 1987 ஆம் ஆண்டு அந்த பயணத்தை முடித்த பிறகு அவர் எழுதிய முதல் புத்தகம் " The Pilgrimage". பயணங்களில் நிகழ்ந்த சம்பவங்கள், சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் அசாதரண நிகழ்வுகள் பற்றியும் எழுதி இருந்தார். பிரேசிலிய பதிப்பக வெளியிடாக வந்த அந்த புத்தகம் வெகு சில மதிப்பீடுகளே பெற்றது எனினும் கொஞ்சம் நன்றாக விற்று தீர்ந்தது.
அதற்க்கு பிறகு 1988 யில் அவர் எழுதிய புத்தகம் "The Alchemist". வாழ்க்கையை வேறொரு தளத்தில் பார்த்த புத்தகம். அவருடைய பதினோரு வருட வாசிப்புகள் அடங்கியது அந்த புத்தகம். 900 பிரதிகள் மட்டுமே அச்சான அந்த புத்தகத்தை மீண்டும் பதிப்பிக்க அந்த பிரசுரம் தயாராக இல்லை என்று கூறியது. தன் கனவுகள் , ஆசைகள், விருப்பங்கள், இலட்சியங்கள் குறித்த தேடலை பௌலொ நிறுத்தவில்லை. இரண்டாவது வாய்ப்பாக வேறொரு பெரிய பிரசுரம் 1990 யில் "Brida" புத்தகத்தை வெளியிட்டது. மனிதர்கள் சுமந்து கொண்டிருக்கும் வெகுமதிகள் குறித்தான ஒரு கதை. அது அவருடைய முந்திய புத்தகங்களுக்கும் பெரிய அடையாளத்தை கொடுத்தது.அதன் பிறகு "The Alchemist" புத்தகம் அடைந்த உயரம் அனைவருக்கும் தெரிந்ததே.
பௌலொ கோய்லோவின் புத்தகங்கள் இனம், மொழி, மதம், நாடு கடந்து பெரும்பாலான, பரவலாக பேசப்படும் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்துகிற ஒரு கலாச்சார நிகழ்வு தான் பௌலொ கொய்லோ. வாழ்க்கையை வேறொரு தளத்தில், பரிமாணத்தில் , கோணத்தில் சிந்திக்க செய்கின்ற ஆளுமை உண்மையில் அவர் எழுத்துக்கு உண்டு என்பதில் பெரும்பாலோனோருக்கு மாற்றுக் கருத்திருக்க முடியாது.
அவருடைய எழுத்துக்களில் சில...
மனிதன் தன் விதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது.
நாம் விரும்புவதை நோக்கிய பயணத்தில் துயரங்கள் நிலைத்திருக்க முடியாது.
கனவுகளை நிறுத்தி விடாதீர். சைகை நிகழ்வுகளை பின் தொடருங்கள்.
உன் காயங்கள் உனக்கு உதவி செய்யும்.
மனதும் உடலும் புதிய சவால்களுக்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

Sunday, July 5, 2009

ஜோஷிகா

சப்தங்களையும்

ஒலிக்குறிப்புகளையும்

மௌனங்களையும்

எழுத்துகளால்

வார்த்தைகளால்

மொழி புணர்ந்த

பிறிதொரு நாளில்

நீதிமன்ற வாசல்களில்

காத்துக் கிடந்தது

அர்த்தமிழந்த

உணர்வுகள்...

செல்லம்மா

எங்கிருந்தோ

எழுதி பிரசுரிக்கிறேன்

எங்கிருந்தோ

வாசித்துக் கொண்டிருக்கிறாய்

இணைத்து வைத்திருக்கிறது

இணையம்...

பிரித்து வைத்திருக்கிறது

யதார்த்தம் மீறாத வாழ்க்கை...

அமராவதி

கொஞ்சினால்

மிஞ்சுவது...

மிஞ்சினால்

கொஞ்சுவது...

எஞ்சியிருக்கிறது

காதல்...

அனிதா

ஒதுக்குபுறமான

கிணற்றில் தற்கொலைக்கு

முயற்சிப்பவர்களை

காப்பாற்றிட எப்பொழுதும்

காத்திருக்கிறது

ஒரு வண்டிச்சக்கரமும்

கயிற்று காட்டிலும்...

கோகிலா

உண்மையாய்

கண்ணீர்விடுவதற்கு

ஒரு நாய்க்குட்டி

நான் இறந்தபிறகு...

Saturday, July 4, 2009

அவனிகா

இறந்துவிடுவதென்ற

முடிவில் தீர்க்கமாய்

நின்றிருந்த எண்ணங்களை

தடை செய்தபடி திடீரென

நின்றது பேருந்து...

காப்பாற்றிய நிம்மதியில்

சற்று நேரம் துடித்து

இறந்து கிடந்தது

சாலையின் குறுக்கே

வழிப்போக்கனின் உடல்...

பாவனா

காலச்சுழலில் திருமணமான
எதிர்த்தவீட்டு அக்கா வீடு
இடதுபுறச்சாலையோரம்...
பக்கத்துவீட்டு அண்ணன் வீடு
வலது புறச்சாலையோரம்...
நதிக்கரையோர இரவுகளில்
பேசிக்கொண்டிருந்து பிரிந்து
சென்ற அவர்களின் நினைவுகளோடு
நான்குபுறச் சாலையொன்றின்
நடுவில் இருக்கிறேன் நான் மட்டும்...

கண்ணகி

மறைத்துவைக்காது
பகிர்ந்துகொண்ட
சாத்திய நுட்பங்களில்
ஒளிந்திருக்கிறது
தற்கொலைக்கான
என் முதல் யுக்தி...

கண்ணம்மா

தீராத துயரின் இறுதியாய்

தெருமுனைக் கிணற்றில்

விழுந்து இறந்த உயிர்களின்

மூச்சுக் காற்று கலந்திருந்த

குடிநீரில் உணவருந்திய

மனிதர்களின் உணர்ச்சிகளில்

கலந்திருந்த உப்பு இறந்தவனின்

கண்ணீர் துளியன்றி வேறில்லை...

Friday, July 3, 2009

அர்ச்சனா

நான் இறந்துவிட்டதாக

அறியப்படும் செய்தியொன்றில்

எப்பொழுதும் மறைந்திருக்கும்

உன் ஆயுட்கால நிம்மதி...

அவிஷ்கா

நீ விளிக்கும்வரை
நானொன்றும் செய்ய இயலாதுவென
நதிக்கரையில்
காத்திருக்கிறது தெருவோர கடவுள்.

அபிநயா

கடவுள்கள் கவசமணியத்
தொடங்கிவிட்டனர்.
பிரார்த்தனை குண்டுகளிலிருந்து
தப்பித்துக் கொள்வதற்கு...

ஸ்ரீநிதி

நம்பிக்கைத்தருகிற அன்பு
ஆறுதல்தருகிற வார்த்தை
நிம்மதிதருகிற நெருக்கம்
அனைத்தையும் எதிர்த்து
வாயிலில் நிற்கிறது
தோற்கச் செய்யும்
இயல்பியல் வாழ்க்கை !

அனன்யா

என்றாவதொருநாள்
தோன்றும் உனக்கு என்னை
நேசித்திருக்க வேண்டாமென்று
எனக்குத் தோன்றியதுபோலவே...

மாதுரி

யாருக்கும் தெரியாமல்
தொலைத்துவிட்டேன்...
யாரும் கண்டெடுக்கும் முன்னே
கண்டறிய வேண்டும்
என்னை...

Thursday, July 2, 2009

சம்பூர்ணா

அரிதாகவும் கிடைப்பதில்லை

மனதில் படியும் பிழைகளை

அழிக்கும் ஒரு இரப்பர்...

துர்கா

நிழல் மரத்தடிகளில்

பேருந்து நிறுத்தங்களில்

மரப் பூங்காக்களில்

மதிய திரையரங்குகளில்

கல்லூரிகளில்,அலுவலகங்களில்,வீடுகளில்

எப்பொழுதும் காணமுடிகிறது பிரபஞ்சமெங்கும்...

ஆண்கொத்தி பெண்களையும் ,

பெண் கொத்தும் ஆண்களையும்......

ஸ்ரீமதி

உன்னிடம்
இறந்து போனது நான்...
என்னிடம்
இறந்து போனது நீ...
மீனுக்கு ஆணென்ன உறவோ?
----------------------------------------------------------------
கடலில் குதித்து இறந்துபோனது ஆண்கள்...
தரையில் குதித்து இறந்துபோனது மீன்கள்...

ரேவதி

என்னைவிடுத்து

அனைவருக்கும்

சொல்லப்பட்ட நண்பனின்

திருமணம்...

எனக்கு மட்டும்

நிறைய செய்தி சொன்னது...

மதிவதனி

இருப்பை நிலைப்படுத்தும்
வெற்றி தோல்விகள்
வாழ்க்கையின் இயல்பாகிவிடுகிறது
என்றாவதொருநாள்
இறந்துவிடும் முயற்சிகளில்...

ஸ்ரீஜா

பயணம் பிடித்தமானதெனினும்

என் தேர்வுகளில் நிகழ்வதில்லை

சக பயணிகள் எப்பொழுதும்...

ஷோபா

நீண்ட பயணமொன்றில்
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவரின்
கண்களில் தொடர்ந்து
வடிந்த கண்ணீரின் ஆதியாக
தொலைத்த வாழ்க்கை
பிரிந்து சென்ற மனைவி
இறந்துவிட்ட குழந்தை
பறிகொடுத்த பணம்
கண்ணில் உறுத்தும் தூசி
இவைகளில்லாத வேறேதோ இருக்க கூடும்...