Saturday, April 18, 2009

சம்பா

அதிகாலைப் பொழுதுகளில்

செம்மண் குவிந்த

மைதானங்களுக்கு

தேநீர் குடித்து

புறப்படுகிறது...

துலாபாரமென

தகர டின்களில் நீர் பிடித்து

சேறு குழைத்து

சுடுவதற்கு முந்திய

செம்மண் சதுரங்களை

செய்துகொண்டிருக்கிறது...

சூரியன் மறையும்

பொழுதொன்றில்

எரியத் தொடங்கும்

தற்காலிக மண் மேடுகளை

பிரிந்துவிடுகிறது...

நகரங்களில்

உயர்ந்து நிற்கும்

கட்டிடங்களின்

வர்ணப் பூச்சுகளில்

மறைந்துகொண்டிருக்கிறது...

கனமழை

நாட்களில் சுவர்களில்

முளைத்திருக்கும்

நீர்த் திவலைகலென

உழைத்தவனின்

இருப்பு...

வெரோனிகா

கண்ட நாள் முதல்

இங்கிருந்தது நெருக்கமின்றி

அந்நியமாக...

என்னுடையதுமல்ல...

தொலைபேசி

அழைப்புகளற்ற

நாளொன்றில்

தற்செயலாய்

பேசத்தொடங்கியது...

இரண்டு மூன்று

நாட்களாக

காணவில்லை...

தேடிய இடங்களிலெல்லாம்

தென்படவுமில்லை...

எங்கு சென்றிருக்கும்...

அறைக்கு வந்துசெல்லும்

அனைவரிடமும்

விசாரித்தாயிற்று...

பார்வை நகரும்

இடங்களிலெல்லாம்

தேடத்தொடங்குகிறது

அனிச்சையாய்...மனது...

சிறிதுகாலத்திற்கு

முன்புவரை உறக்கமற்ற

நள்ளிரவுகளில்

எதையாவது பேசிக்கொண்டு

விழித்திருக்கும்...என்னோடு...

மனிதர்களைப்

போன்றதல்ல புத்தகங்கள்

தொலைத்துவிடுவதற்கும்...

மறந்துவிடுவதற்கும்...

Monday, April 13, 2009

நந்தினி

இருள் படர்ந்த

காட்டு வெளியின்

ஒற்றைப் பாதையில்

பயணிக்கிறது...

சுற்றிலும் காட்டு

மிருகங்களின்

குரல்...

மரங்களின் ஊடே

வீசும் காற்றின்

சப்தத்தையும் தாண்டி

எந்தக் கவலையும்

இல்லாமலே நடக்கிறது

நிசப்தமாக

தன் இலக்கு நோக்கி...

நடந்துவந்த

பாதைகளில்

பாவங்களின்

சுவடுகள்

இரத்தத் துளிகளாய்..

திரும்பிபாரமலே

திக்கு நோக்கி

நீள்கிறது - ஒளியைத் தேடி...

இதோ இன்னும்

சில அடி தொலைவில் என் இலக்கு

மெல்லிய வெளிச்சமாய்...

Saturday, April 11, 2009

லத்திக்கா

விழித்துக்கொள்ளும்

தருணங்களில்

புறப்பட்டுவிடுகிறது...

மனிதர்கள்

தென்படும்

மண்சாலைகளில்...

பாட்டி அடுக்கி

வைத்திருக்கும்

நெல் மூட்டைகளில்...

ஊறவைத்திருக்கும்

சோற்றுப் பாத்திரங்களில்...

குப்பைகள்

கொட்டிகிடக்கும்

குழிகளில்...

சிகரெட் துண்டுகள்

சிதறிக் கிடக்கும்

டீக்கடை வாசலில்...

சிலநேரம்

வியர்வையோடு

உறங்கிக் கொண்டிருப்பவனின்

உடலில் ...

எப்பொழுதாவது

கால்வாய் கரையோரம்...

உதிர்த்துவிட்ட

வார்த்தைகளைப்போலவே

கொத்திக்கொண்டிருக்கிறது

கோழிக் குஞ்சு.

Friday, April 10, 2009

ரஞ்சிதம்

நினைவுகள்

பெற்றெடுத்த

கவிதையொன்று

நீண்டநேரம்

பேசிக்கொண்டிருந்தது

பிடிவாதமாய்...

பேசத்தொடங்கிய

பூதமென

பேசிக்கொண்டிருந்தேன்

நானும்...

விழித்துக்கொண்ட

பொழுதுகளில்

சிதறிக்கிடந்தது

வாழ்க்கையை

அர்த்தப்படுத்தும்

வார்த்தையொன்று...

நித்யா

அகன்ற

பாதைகளின்

இடதுபுறம்

திரும்பும்

குறுக்குச்சந்தில்

இருக்கிறது...

எப்பொழுது

கேட்கிறது

பண்பலைவரிசை...

தலை, தாடி,

மீசை மயிரென

கிடக்கிறது

எங்கும்...

சுவற்றில்

தொங்கும் அழகியின்

வனப்பின்றி

நகர்கிறது

முடிதிருத்துபவனின்

அன்றாடம்.

இலக்கியா

விருப்பமின்றி

பயணிக்கிறேன்

எப்பொழுதும்...

முகமறியாத

மனிதர்களின்

முடிவுகளில்

மாறிக்கொண்டிருக்கிறது

பயணதிசை...

பயணிகளின் பணிவான

கவனத்திற்கு

" இந்த இரயில்

சற்று தாமதமாய்

இலக்கினை

சென்றடையும்"

Wednesday, April 8, 2009

ஜனனி

மாலை நேரத்து

அடிவானமென

சிவந்து கிடக்கிறது

உன் முகம்...

கல்லறைகளில்

ஜீவிக்கிறது

சிலுவைகள்...

யாருக்கும் புலப்படாத

காற்றைத் தேடி

அலைகிறது

பாய்மரம்...

கருவறையின்

பின்னே

மறைகிறது

சூரியன்...

பாறைகளில்

நின்றவண்ணம்

அலைகளை

ஏசுகிறான்

ஒருவன்...

பறவைகளோடு

பறக்கிறது

பட்டங்கள்...

குழந்தைகளோடு

போட்டியிட்டு

நிசப்திக்கிறது

அலைகள்...

யாருமற்ற

மணல்வெளிகளில்

என்னோடு

சண்டையிட்டு

பிரிந்து செல்கிறாய்...

என் எழுத்துக்களில்

நீயும்

உன் வார்த்தைகளில்

நானும்

தோற்றுக்கொண்டிருக்கிறோம்

ஒருவரிடமொருவர்...

நீண்டு கொண்டேயிருக்கிறது

கடலின் இருப்பு...

Tuesday, April 7, 2009

மேகலை

ஏதோவொரு கட்சியின்

ஏதோவொரு பிரிவின்

தலைமை அலுவலகத்தில்

காற்சிலம்போடு

கண்ணகி சிலை...

என்ன செய்வார்களோ

இவர்கள்...

Monday, April 6, 2009

லஜ்ஜாவதி

உதட்டுச் சுழிப்பில்,

கன்னக்குழியில்,

வளைவு நெளிவுகளில்

நிறைவான உன்

நினைவுகளில்

நிகழ்ந்த

வெற்றுப் புணர்ச்சியில்

தொடங்கிய

உடல் அதிர்வு

ஒலிகளாய்...

எழுத்துக்களாய்...

வார்த்தைகளாய்...

வாக்கியங்களாய்...

வரிகளாய்...

கவிதையாய் முடிகிறது.

Sunday, April 5, 2009

அனன்யா

குளக்கரையோரம்

குதித்துச் செல்வது நீ

அதிர்வது நீரும்

சில நேரங்களில் நானும்...

----------------------------------

மீசையும் ஆசையும்

வளர்ந்துவிட்ட

பிறிதொரு நாளில்

தாயின்மடி உறங்கி

தாலாட்டு கேட்கும்

சுகம் இழந்து

அனாதையானேன்

பொருள் தேட...

---------------------------------

என்னைச்

செதுக்கியதும்

அதிகம் பிடித்துப்போனது

உனக்கு பிடிக்காத

என்னை....

சௌந்தர்யா

ஒன்றாக கலந்துவிடாத
இரவு பகலென
தனித்திருப்பதில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
இரு உயிர்கள்
சாதிக்காக...

அபராஜிதா

உன் நிழல்

விழும் குளங்களில்

கல்லெறிவதில்லை நான்

எப்பொழுதும்..

-----------------------------------

என் தாலாட்டுகளில்

கண் அயர்ந்தவளே

இப்பொழுதெல்லாம்

உறக்கத்துக்கு

என்ன செய்கிறாய்... நானில்லாமல்..

--------------------------------

பிரபஞ்சவெளிகளில்

தேடியலைந்து

தீராத ஆவேசத்தோடு

காற்றில் மோதி மோதி

தற்கொலை செய்துகொண்டது

உன்னை பிரிந்த உயிரொன்று..

--------------------------------

பண்படுத்தாத

நிலமொன்றில் எப்பொழுது

விளைந்திருக்கும்

செய்துவிடத் தவிக்கும்

கொலையொன்று..

கற்பழிப்பொன்று...

வங்கி கொள்ளையொன்று...

சாஸ்வதா

அமானுஷ்யங்கள்

பிரிந்திராத

அதிகாலை பொழுதொன்றில்

விழித்துக்கொள்ளும்

நினைவுகள் உன்

வீட்டு வாசல்படியில்

செய்திதாள்களோடு

சேர்ந்துகிடக்கிறது...

வழக்கமென

செய்தித்தாளையும்

மிதித்துச் சென்று

கோலமிடுகிறாய்

வாசலில்...

Thursday, April 2, 2009

ஷ்ரத்தா

நதிகளில்

பூக்களை நிரப்பி

இறகுகளில்

கட்டிய வீடு...

சுற்றியும்

மயில்தோகையில்

வேலிகள்...

ரோஜா, மல்லிகை

கலந்த மணம் வீசும்

காற்று...

மின்மினி பூச்சிகளில்

ஒளிரும் விளக்குகள்...

நானற்ற வேளைகளில்

பேசிக்கொண்டிருக்க கிளிகள்...

ஓடி விளையாட மான்கள்...

கருப்பு பூனையென

ஆணொன்று

வெள்ளை முயலென

பெண்ணொன்று ஆக

இரண்டு குழந்தைகள்...

மழைத்துளிகள்

பிடித்து வைக்க

பனித்துளியில் பாத்திரங்கள்...

ஊர் உலகம் சுற்றிவர

இலவம்பஞ்சுகளில் செய்த வாகனம்...

பறவைகள் கூடடையும் பொழுதுகளில்

திரும்பிவரும் நினைவுகளை

உறங்கச் செய்ய உன் தாலாட்டு...

பசிக்கும் தருணங்களில் என்

பார்வையிலேயே நீ...

மஞ்சள்

வயல்வெளியின்

நடுவே வீற்றிருக்கும்

தனித்த மரமென

பசுமையாய்,

ஒரு நாள்...ஒரே நாள்...

வாழ்ந்து சாகும் ஆசையொன்று

உன் மடியில்...

சஸ்ரிகா

செம்மண் சாலைகளின்

இருபுறமும்

பச்சை பசேலென

உயர்ந்திருக்கிறது அடர்த்தியாக

மரங்கள்...

நீண்டு வளையும்

சாலையின் இடது ஓரச்

சரிவுகளில் பரந்திருக்கிறது

புல்வெளி...

உடையவனை தொலைத்துவிட்ட

நிழற்படக் கருவியொன்று

ஊடுருவிச் செல்கிறது

மரங்களின் இடையே...

காற்றின் விசையில்

மஞ்சள் பூக்களை உதிர்க்கிறது

ஒற்றை மரமொன்று...

உதிர்ந்த மலர்களை

தாங்கி நிற்கிறது கான்கிரீட்

அமர்வு பலகை...

விருட்டென்று பறக்கிறது

பறவைகள் மேற்கு நோக்கி...

அணில் கடித்த

பாதியாக கிடக்கிறது

ஆப்பிள் பழமொன்று...

எல்லைகளாக நிற்கிறது

மரச் சட்டங்களில்

வேலிகள்...

இறுகத் தழுவியபடி

ஆணும் பெண்ணும்

நின்றநிலையில்...

அச்சத்தில் வெளிறியிருக்கிறது

பெண்ணின் முகம் ...

மழைத்துளிகள் விழுந்துருகும்

பனிக்கட்டியென

ஆண்மையில் உருகிநிற்கும்

பெண்மை...