Friday, March 13, 2009

மயிலிறகு

நானும் மாரியும் பேசிக் கொண்டிருந்தோம். ராமுவிடம் இருந்து கால் வந்தது.
"டேய் , ஆர்ட்ஸ் காலேஜ் டீக்கடைக்கு வாடா" என்றான்.
சரி என்று நானும் மாரியும் பைக்கில் புறப்பட்டோம்.
வழக்கமாக நண்பர்கள் நாங்கள் அந்த கலைக் கல்லூரி அருகில் உள்ள டீகடையில் தான் டீ குடிப்போம். அந்த கடைக்கு பக்கத்தில் தான் ராமுவின் வீடும் இருந்தது. அந்த கடைக்காரரும் நன்றாக எங்களுடன் பேசுவார். ராமு கடையில் இருந்தான் .
மூன்று பெரும் டீ சொல்லிவிட்டு கதை பேசிக்கொண்டு இருந்தோம்.
திடீரென்று எங்கள் பேச்சு இந்திய பொருளாதாரம் பற்றி எல்லாம் நீண்டு போனது.
அப்போதைய மத்திய நிதித் துறை மந்திரி, அவன் பொண்டாட்டி, பிள்ளைகள், எல்லாத்தையும் கண்டபடி திட்டிக் கொண்டே டீக்குடித்து முடித்தோம்.
ஒருமணி நேரம்தாண்டி போன எங்கள் பேச்சுக்கு முறுக்கு, மிக்சர், கடலை உருண்டை எல்லாம் தீனி ஆகியிருந்தது.
மாரி மணி என்னடா என்றான்.
எட்டே கால்டா என்றேன்.
வேகமாக ஓடிச் சென்று பைக் கண்ணாடியில் முகம் பார்த்து தலைவாரி முகம் கழுவினான்.
இது வழக்கமாக நடப்பதுதான். பத்தாவது படிக்கும் இவன் காதலி(இவன்தான் அப்படி சொல்லிக்கிட்டு திரியுறான்) டியுசன் முடிஞ்சு வரும். அத அப்படியே கொண்டே வீட்டுல விடுற வாட்ச்மேன் வேலைய பார்டைம்மா பாக்குறான். ஆனா அந்த பொண்ணு இவன திரும்பி கூட பாக்கிறது இல்ல.
அவுங்க அப்பா என்னவோ புள்ள பொறுப்பா குடும்பத்த கரை சேர்த்திடும் என்ற நம்பிக்கையில இருகாரு.. இது என்னன்னா இங்க பொண்ணுங்க பின்னாடி பொறுக்கிக்கிட்டு திரியுது. இதுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கு...எப்படி கரை சேர்க்க போகுதோ தெரியல...
அதோ அந்த பொண்ணு எங்கள கடந்து போனது...
மாரி குழந்தை மாதிரி ஹீ..ஹீ நு சிரிச்சிட்டு அந்த பொண்ணு பின்னாடியே பைக்கில் மெதுவா போனான்.
கடைக்காரரிடம் எவ்வளோ ஆச்சு என்றேன்.
அறுபத்தி எட்டு ரூபாய் ஐம்பது காசு என்றார்.
சட்டை பையில் கைவிட்டு துழாவி பார்த்தேன் , ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.
அதற்குள் ராமு இல்லடா...நான் தர்றேன் என்றான்.
சரி இந்த ஐம்பது ரூபாய சேர்த்து கொடு என்றேன்.
இல்லடா நான் தர்றேன்....என்கிட்டே இருக்கு என்றான்.
அவனையே கொடுக்க சொல்லிவிட்டு நான் விடைப் பெற்றேன். பைக்கை அந்த மாரி பரதேசி எடுத்து சென்று விட்டது. சுப்ரமணியபுரம் வரை நான் நடந்துதான் செல்லவேண்டும்.
நடக்கத் தொடங்கினேன்.சிறிது தூரமே சென்றிருப்பேன். நோட்டு புத்தகத்தை டீக்கடையில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
திரும்பி நடக்கத் தொடங்கினேன்.
கடையில் ராமுவை காணும்.
கடைக்காரரிடம் அண்ணே இங்க ஏதாவது நோட்டு இருந்துச்சா என்றேன்.
கூல் ட்ரிங்க்ஸ் டப்பா மேல இருக்கும் பாருப்பா என்றார்.
நல்ல வேலையாக நோட்டு அங்கேயே இருந்தது..நோட்டை
எடுத்துக் கொண்டு ராமு போய்ட்டானா என்றேன்.
இல்லப்பா... தம்பி வீட்டுக்கு காசு எடுக்க போயிருக்கு... அவர் சொல்லி முடிக்கவும்
அவன் வந்து இந்தாங்க அண்ணே என்பதற்கும் சரியாக இருந்து.
என்னை பார்த்ததும் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு , டேய் நீ இன்னும் போகலியா என்றான்.
அது கிடக்கட்டும் நீ எங்க இங்கே என்றேன்.
இல்லடா...அம்மா தயிர் வாங்கிட்டு வர சொன்னுச்சு அதான் வந்தேன் என்றான்.
ஏன்டா உனக்கெல்லாம் எங்களப் பார்த்தா எப்படி இருக்கு...நான் தான் காசு குடுக்குறேன்னு சொல்லிட்டேன். நான் குடுத்தா என்ன.. இல்ல நீ குடுத்த என்ன...அதுக்கு ஏன்டா இப்படி...அப்ப நாங்கல்லாம் உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாட்டுக்கு காசு கொடுக்கணும்.என்னென்னவோ பேசினேன். அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்து நின்று கொண்டிந்தது. ஒரு வேலை அதிகமா திட்டிட்டமோ என்றுகூட தோன்றியது.
கண்ணா பின்னவென்று கத்திவிட்டு , நோட்டை எடுத்துக் கொண்டு திரும்பி வீடு நோக்கி நடந்தேன்.
தெரு விளக்கின் ஓரமாக வந்ததும் நோட்டை பிரித்துப் பார்த்தேன்...கிழிந்த பக்கங்களின் இடையே மெல்லிய மயிலிறகும் இருந்தது....
பசி வயிற்றை நெருங்கி இருந்தது. இரண்டு மூன்று விளக்கு கம்பங்களை தாண்டி வந்ததும் மீண்டும் நோட்டை திறந்து பார்த்தேன்.
மயிலிறகையும் சில கிழிந்த பக்கங்களையும் காணவில்லை.
திரும்பி விளக்கு வெளிச்சத்தில், குனிந்து கொண்டே தேடிக்கொண்டு வந்தேன். எதிரில் வந்த வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தில் அப்படியே நின்று விட்டேன்... திட்டிக் கொண்டே இறங்கினான் வண்டிக்காரன்.
அட..நம்ம மாரி.
என்னடா பண்ற என்றான்.
ஒன்னும் இல்லடா..நோட்டு கிழிஞ்சு இருந்துச்சு..அதுல சிலது வர்றப்ப கீழ விழுந்துடுச்சு என்றேன்.
அவனும் என்னோடு சேர்ந்து தேடினான்.
பிரேக் அடித்து சைக்கிளை நிறுத்தினான் ராமு.
என்னடா என்றேன்.
இல்லடா நீ பாட்டுக்கு மயிறு போச்சுன்னு திட்டிட்ட...ஒருமாதிரி இருந்துச்சு. அதான் சைக்கிள எடுத்துகிட்டு... என்று நிறுத்தினான்.
என்ன பாக்கலாம்....சாரி கேக்கலாம்னு வந்தியாக்கும் என்று நக்கலாக கேட்டேன்..
இல்லடா மாமா வீட்டுக்கு போலாம்னு வந்தேன்...பானு வந்திருக்காடா என்றான்(அவன் மாமா பொண்ணு ).
என் கோபம் அதிகரிக்க தொடங்கியது... சரி நீ கிளம்பு... போடா...போயி பானுவ பாரு போடா என்று அதட்டினேன்.
அவ கிடக்கா...நீங்க என்னடா பண்றீங்க இங்க என்றான்.
சொல்லி முடித்தேன்...
சிறிது நேர தேடலுக்கு பிறகு சாலையோரமாக கிடந்த அந்த நோட்டு பக்கங்களை எடுத்து வந்து ராமுவே கொடுத்தான்.
வாங்கியது அவசர அவசரமாக மயிலிறகை தேடினேன்.
ஏதோ இரண்டு பக்கங்களோட ஒட்டிக் கொண்டு இருந்தது.
நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
மாரியும் ராமுவும் ஒரே குரலில் கத்தினார்கள்.
"இந்த பொழப்புக்கு சிவன் கோயிலில் செருப்புக்கு டோக்கன் போடலாம்டா என்றார்கள்..."
எதையோ சாதித்தது போல நிம்மதியா தூங்கினேன்..இருக்காதா பின்ன...
ஆண்டவன் கொடுக்குறத தொலைச்சிட்டு அதையே தேடி அலைஞ்சு கிடைச்சதும் சந்தோசப் படுற மனச குழந்தைனு சொல்லாம வேற எப்படி சொல்லுறது...

No comments:

Post a Comment