Tuesday, March 31, 2009

உதந்திகா

கருப்பு வெள்ளையென
கலந்திருக்கிறது மேகக் கூட்டங்கள்
மழையென பொழிவதற்கு...

மெல்லியக் கீற்றென
ஊடுருவுகிறது சூரியஒளி
எல்லா இடங்களிலும்...

கலங்கரை விளக்கமொன்றின்
உச்சியில் சுழன்று
கொண்டிருக்கிறது காற்றாடி...

நீத்தார் கடன் செய்ய
வந்த ஒருவன் நண்டுகளை
துரத்துகிறான் கவலைகளின்றி...

கடல்மணலை கிளப்பிவிட்டு
செல்கிறது குதிரையொன்று
முதியவரை சுமந்தபடி...

கரைக்கும் கடலுக்குமாக
நீண்டிருக்கிறது ஒற்றை
சிமெண்ட் பாலம்...

மணல் வெளிகளில்
கொத்துகிறது கடல் பறவை
எதையோ தூரமாய்...

கரையோரம்
ஒளிந்திருக்கிறது ஆணும்
பெண்ணுமாய் கால்தடங்கள்...

கரையொதுங்கிய
சடலத்தை நுகர்ந்துவிட்டு
நகர்கிறது காற்று...

வேடிக்கையில்
நிற்கிறது கீறி - பாம்பு சண்டை
பார்க்கும் கூட்டமொன்று...

பலத்த ஓசையோடு
தொடங்குகிறது மழை...
தெறித்துச் சிதறுகிறது கூட்டம்...

இறந்தவனைச்சுற்றி
சுற்றி வருகிறது
தெருநாயொன்று...ஊளையிட்டபடி...

Monday, March 30, 2009

இச்சாவதி

நினைவில் இல்லாத

நாளொன்றின் சந்தியா கால

தொடக்கத்தில் மலர்கள்

வேண்டுமென்கிறாய்.

இரவுகளில் விழித்திருந்து

பனித்துளி பூக்களோடு

வருகிறேன்.

இலைகளை கிள்ளிவிட்டு

பூக்களை நுகர்ந்து கொண்டிருக்கிறாய்.

யாருமற்ற ஏகாந்த வெளிகளில்

ஏதோ நினைத்தவளாக

பூக்களின் மீதான ஆய்வை

தொடங்குகிறாய்.

பூக்களோடு பேசுகிறாய்.

நடமாடுகிறாய்... பாடுகிறாய்...

இரசித்துக் கொண்டிருப்பதில்

நகர்கிறது என் நாட்கள்...

தொடர்ந்து கொண்டிருக்கிறது

உனது ஆய்வு...

நானறியா பொழுதுகளில் நம்

இடைவெளியை அதிகரிக்கிறது பூக்கள்.

பிறிதொரு நாளில்

சண்டைகளின்றி

பிரிந்துவிடுகிறோம் நாம்

ஒருவருக்கும் சொல்லாமல்...

பூக்களோடு பழகியவளாய்

யாருமற்று திரிகிறாய்...

மாறிக்கொண்டிருக்கும் நாட்காட்டியின்

ஏதோவொரு நாளில்

இதழ்களை கிள்ளிய கோபத்தில்

பிரிந்துபோன பூக்களோடு

முடித்துக் கொள்கிறாய் ஆய்வை...

சமர்ப்பிக்கப்படாத

ஆய்வறிக்கையின்

முடிவுகளென

வெளிவராமலே கிடக்கிறது

பூக்களின் மீதான உன்

காதலும் பாசமும்...

Sunday, March 29, 2009

சௌஜன்யா

நீண்ட

பொழுதொன்றின்

இறுதியில் பயணம்

முடிந்து வீடு வருகிறேன்.

தொலைக்காட்சியில்

ஒளிரும்

ஏதோவொரு

நெடுந்தொடரின்

இறுதியைப்

பார்த்துக் கொண்டிருக்கிறாய்...

களைப்பு தீர

குளித்துவிட்டு

உடைமாற்றி வருகிறேன்.

எப்பொழுதோ எடுத்துவைத்த

இரவு உணவு சூடற்று

உணவு மேஜையில்...

ஒன்றாகவே உணவருந்த

அமரும் தருணங்களில்

விளம்பர இடைவேளை...

விரைவாக சாப்பிட்டுவிட்டு

விருட்டென்று

எழுந்து கொள்கிறாய்

உனக்காகவே காத்திருக்குமொரு

நெடுந்தொடருக்காக...

உணர்வுகளின்

மெல்லிய இழைகள்

அறுந்து கொண்டிருப்பது அறியாமல்,

இரசித்துக் கொண்டிருக்கிறாய்

நாடக பிம்பங்களை...

இன்னும் உறங்காமல்

பார்த்துக் கொண்டிருக்கிறது

குழந்தைகள்...

உறவுகளை

புறக்கணிக்க தயாராக...

ஸ்ரவந்தி

என் மீதான
நம்பிக்கையும்
உன் மீதான காதலும்
பேச்சொலிகள்
மௌனிக்கும்
நூலகங்களில்
சந்திக்க செய்கிறது!

மின்விசிறியை
முறைத்துவிட்டு
இடது காதோரம் புரளும்
தலைமுடியை சரி செய்கிறாய்
வலது காதோரம்
ஜிமிக்கி ஆடுகிறது!

உன் இடையைவிடசற்றே
பெரிதான புத்தகமொன்றை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
இல்லை...வாசிப்பதுபோல்
பாவனை செய்கிறேன்!

இமைகளை படபடவென
மூடித்திறந்து வார்த்தைகளின்றி
கூப்பிடுகிறாய்...யாரோ
உரத்தக்குரலில்
சப்தமிடுகிறார்.."கூச்சல் போடாதீர் என்று"

எப்பொழுதும்
பெண்கள்
இப்படித்தான்
பேசுவார்களோ...

வசிப்பதற்காக
வந்தவர்கள்
வாசிப்பது போலவே
இருக்கிறார்கள்...

ஒரே மேஜையில்
எதிரெதிரே அமர்ந்த நாமும்
வாசித்துக் கொண்டிருக்கிறோம்
ஒருவரையொருவர்...

Thursday, March 26, 2009

அஷ்வந்திதா

கவிதைகள்

புறக்கணித்த

வார்த்தையொன்று

கடலுண்ட மனிதர்களின்

ஓயாத மூச்சுக் கற்றென

அலைகிறது...

உறக்கம்

தொலைத்தவனின்

குற்றங்களென

உறுத்துகிறது...

காற்றின் வீச்சில்

அலைவுறும் விசைப்பலகை

பூக்களென

அதிர்கிறது...

ஏணிகளில் ஏறி

பாம்புகளில் இறங்கி

பரமபத பகடைகளென

உருளுகிறது...

முயன்று தோற்று

மீண்டும் நிகழ்த்துகிறது

நிகழ்ந்துவிடாத நிகழ்வுகளை

மௌனங்களில்...

தலைகீழ் விகிதத்தில்

கலந்த மதுவென கசக்கிறது

வார்த்தைகளால் தோற்று

நகரும் என் உருவம்...

Tuesday, March 24, 2009

பர்வதவர்த்தினி

நிலுவையிலிருக்கும்

நியாயத்தல வழக்கென

தீர்ப்புகளின்றி

நகர்கிறது நாட்கள்...

எல்லா நாட்களிலும்

ஏதோவொரு விதமாய்

நினைக்கிறேன்...

அகோரமாக விரியும்

தொடர்பறுந்த காட்சிகள்

சுடுமண் சிற்பங்கள், சூலாயுதமென

அய்யனார் கோவிலில்...

அமானுஷ்ய புதிராக

வீசுகிறது காற்று...

ஆறாத வன்மத்தோடு

இன்னும் நீ உலாவுவதாய் கேள்வி...

என்றாவதொருநாள்

சந்திக்கும்பொழுதுகளில்

என்ன செய்வாய்?

நிர்தாட்சண்யமாய்

நஞ்சேறிய வார்த்தைகளில்

அம்பெய்துவாய்

இல்லை...

அச்சத்தில் ஒளிந்து கொள்வாய்...

இல்லையில்லை...

தைரியமாய் முத்தமிடுவாய்

நெற்றியில்...

கன்னத்தில்...

உதடுகளில்...

உணர்ச்சிகள்

விழித்துக்கொள்ளும் தருணங்களில்

விலகிநின்று சிரித்துக்

கொண்டிருப்பாய்...

நிராயுதபாணி ஒருவனை

சிறைபிடித்துச் செல்வாய்...

நீ வென்றதாக அறிவிக்கும்

பொழுதுகளில் தீராத காதலோடு

சுழன்று கொண்டிருக்கும்

ஸ்வரமொன்று உன்

இதழ்களில் முத்தமிட்டு சொல்லும்..

இவன் உன்னவனென்று....

Monday, March 23, 2009

தீட்சண்யா

அழைப்புமணி

ஒலிக்கும் தருணங்களில்

திறக்காத கதவுகளின் முன்

வருகிறது "யாரது ".

பூக்களின்

பெயரொன்றை உதிர்த்து

நிற்கிறேன்.

முழுமையாக

திறக்காத கதவுகளின்

இடைவெளியில்

ஜன்னல் பூக்களென

எட்டிப் பார்க்கிறாய்...நீ

வினாக்கள் ஆகிறாய்..

விடைகள் ஆகிறேன்...

"எங்கிருந்து வருகிறாய்?"

"தேவதைகளின் தேசத்திலிருந்து"

"சந்திக்க விரும்புவது ? "

"பூக்களின் இளவரசியை"

" சந்திப்பின் நிமித்தம்?"

"முத்தங்களை பரிசளிக்க"

வார்த்தைகளை பறித்தக் காற்று

மௌனத்தை நிரப்பிவிட்டு செல்கிறது

நெருப்புக் கங்குகளின் ரௌத்ரம் தரிக்கிறாய்

விடைகளின் சூட்சுமமறிந்து...

நீட்ச ஸ்திரிகளின்

வார்த்தைகளில்

மிளிரும் பகட்டின்றி ஏதோவொரு

அவமதிப்பை நிகழ்த்திக் காட்டுகிறாய்.

எல்லா தருணங்களிலும்

நீயின்றி

அழிந்தழியும்

தண்டனையொன்றை

விதித்து செல்கிறாய்...

குற்றங்களற்ற

வண்ணங்களில்

ஓவியமொன்றை

சிருஷ்டித்தவனாய்

எப்பொழுதும்

காத்து நிற்கிறேன்

அண்டப் பெருவெளியில்

நீ கடந்து செல்லும் தருணங்களுக்காக...

Friday, March 20, 2009

மிருதுளா

தினமும்

ஒன்றிரண்டு முறையாவது

கேட்கப்படுகிறது.

நண்பர்களும்,

நண்பர்கள் அல்லாத சிலரும்

வினவுகிறார்கள்.

சிலருக்கு அக்கறை

சிலருக்கு பொழுதுபோக்கு.

ஒவ்வொருமுறையும்

வார்த்தைகளற்ற

புன்னகையை

பதிலாக்கிக் கொண்டிருந்தேன்.

நேற்று கூட

கூட்டமாக நின்றிருந்த

இடத்தில் பெண்ணொருத்தி

சப்தமாக கேட்டாள்.

அவமானமாக இருந்தது...

இப்பொழுதெல்லாம்

குழந்தைகளைப் போன்று

புன்னகைக்க முடிவதில்லை...

தார் சாலைகளில்

விழுந்துடைந்த

பனிக்கட்டியாக

வெம்மை தாங்காமல்

உருகுகிறது

சுயம்...

தொண்டைக்குள்

சிக்கிய முள்ளென

அறுத்துக் கொண்டிருக்கும்

"எப்பொழுது திருமணம் "

என்ற கேள்விக்கு

என்ன பதில் சொல்வது

உன்னைக் கேட்காமல்...

ஆதர்ஷினி

நீண்ட பயணத்தின்

விடியாத இரவுகள்

இன்னும் நீளச்செய்கிறது

நினைவுகளை...

மின்சாரக் கம்பிகளை

மிதித்தெளும்பும்

பறவையாக

விருட்டென்று பறக்கிறது

மனது...

பூக்களின்

நிறமிழந்த

மரத்தின் கீழே

குளிக்காத பறவையொன்று

அசிங்கம் செய்த

ஆடையோடு

நிற்கிறேன்...

உன் வருகைக்காக

பிறிதொரு நாளில்!

Thursday, March 19, 2009

நீலாயதாட்சி

நடந்து செல்லும்

வழியில் சுழன்று கொண்டிக்கும்

காற்று

என்றாவதொரு நாள்

தடுமாறச் செய்யும்

உன்னை...

இறந்துவிட்டிருக்கும்

என் உயிரின்

தொடர்பறுந்து...

அமிர்தவர்ஷிணி

எதிர்ப்படும்

நேரத்தில்

கடந்துசென்ற

வாகனத்தின்

ஒளியென

சூன்யத்தில்

ஆழ்த்துகிறது

தனிமை...

நள்ளிரவு

காற்றின் குளுமை

முருங்கைமர இலைகளின்

மேனி வருடிச்

செல்கிறது...

பரந்த ஆலமரத்தின்

நிலம் தொடாத

விழுதென

ஆடுகிறது

இறந்து ஒழியாத

உன் நினைவுகள்...

மனிதர்களற்ற

இரவுகளில்

அங்கொன்றும்

இங்கொன்றுமாக

ஒளிர்கிறது

மின்விளக்குகள்...

அலைந்து திரியும்

மிருகங்களின்

நிழல்கள்

நரியென நகர்கிறது...

இறந்தகால

நினைவுகளோடு

உறங்க இடம்

தேடியலைகிறது

மனது...

நாய்களின்

சப்தங்களோடு

வேட்டைக்காரனாய்

குதிரையில்

வருகிறேன்...

அயர்ந்து

உறங்கும் நீ

விழித்துக் கொள்கிறாய்

திறக்காத கதவு

அடைத்திருப்பதை

உறுதிசெய்து

உறங்கச் செல்கிறாய்

மீண்டும் கனவில்...

உடைந்த

தேங்காயின்

ஒருபாதியாக

ஒளிர்கிறது

நிலா...

அடைக்கமுடியா

ஜன்னல் கதவின்

இடுக்கு வழியே

நுழைந்த காற்று

கலைத்துவிட்டு

செல்கிறது

என் நினைவுகளை...

இரவெல்லாம்

அழுத கண்ணீர்

இலைகளில்

பூக்களில்

துளிர்த்திருக்கும்

பனித்துளியாக.

Tuesday, March 17, 2009

விட்டில் பூச்சி

தீராத
இச்சையோடு
மரித்த பெண்ணின்
தேகம்,

முகந்தெரியாதொருவனை
பிணவறையில்
மிருகமென ஆக்கி
புணர்ந்து,
தணிந்து அழிந்தது...
ஒளி தேடி வந்தழியும்
விட்டில் பூச்சியென அவன்...

காற்றஞ்சல்...

அகன்ற வீதிகளின்

யாருமற்ற வீடுகளில்

மெல்லிய இசையொலியுடன்

கதவு திறந்து

விநியோகம் செய்கிறது

காற்று...

நேற்று முன்தினம்

பதிவான நினைவஞ்சல்களை

சேதமின்றி....

உணரமுடியாத் துயர்...

முறிந்து விழுந்த

கிளையின்

வலியென...

வலைக்குள் சிக்கிய

மீனின்

அலரலென...

உணவின்றி தவிக்கும்

பிட்சைப்பாத்திர

பசியென...

மழையில் அழுது

நனைபவனின்

கண்ணீரென...

உணரமுடியா துயராகவே

இருக்கிறது...

நீ

திருப்பியனுப்பிய

காதல்...

களவு போன வரிகள்

காற்றெதிர் திசையில்
அலைந்து திரியும்
பறவையின் சிறகிலிருந்து
உதிர்ந்த இறகென
இலக்கற்று
பயணிக்கிறது மனமெங்கும்...

காற்றுக் குமிழென
வெடிக்கும் நினைவுகள்
அலையென பரவுகிறது...


நஞ்சென உரைத்த
வார்த்தைகளால்
நீலம் விரவுகிறது
தேகம் முழுவதும்...


நூலறுந்த பட்டத்தின்
தலை வேறு, வால் வேறாய்
எங்கெங்கோ கிடக்கிறது

உடைந்து போன மனது...

முடிவுறாக் கவிதையின்
களவுபோன
இறுதி வரிகளென - நீ
பறித்துச் சென்ற
நம்பிக்கைகளால்
அர்த்தமிழந்து நிற்கிறது
வாழ்க்கை.

Sunday, March 15, 2009

பிறன்மனை

ஒல்லியாகவோ
குண்டாகவோ
உயரமாகவோ
குள்ளமாகவோ
கருப்பாகவோ
கலராகவோ
அன்றில்
பறவையென ஒரு
ஆசைநாயகன்
வேண்டும்
என் தாலியறுக்க...

நடந்தது என்ன?

துரியோதனன்-யாரோ

துச்சாதனன் - யாரோ

துகிலுரியப்பட்டாள்

திரௌபதி.

சட்டசபையில்.

என்னவென்று சொல்வது

உரையாடும் தருணங்களில்

நானறியாமல்

வந்துவிழும்

உன் வார்த்தைகள்

வெட்கம் கொள்ள செய்கிறது ...

என்னை!

யாரும் கேட்டிடாத

நேரத்தை

யாருக்கோ

சொன்னவனாய்...

------------------------------------

காற்றில்

நூலறுந்த

பட்டமென...

இருப்பின்றி

பறக்கிறது

இதயம்,

நீயும்

இதே ஊரில்

இருப்பதறிந்து !

விழி தேடும் காதல்

அடர்ந்த வனத்தின்

மனிதர்களற்ற வெளியில்

தவமிருக்கும் பூவென...

பரந்த வயல்வெளியின்

சலனமற்ற நீர்ப்பரப்பில்

நின்றிருக்கும் பறவையென...

விரிந்த ஆகாயத்தின்

ஏதோவொரு மூலையில்

சூல்கொண்டிருக்கும் கருமேகமென...

அனைத்தும்

அர்த்தப்படுகிறது

ஏதோவொரு

காத்திருப்பாக...

எதிர்நோக்கும்

உன் வருகையைத் தவிர்த்து !

Friday, March 13, 2009

மயிலிறகு

நானும் மாரியும் பேசிக் கொண்டிருந்தோம். ராமுவிடம் இருந்து கால் வந்தது.
"டேய் , ஆர்ட்ஸ் காலேஜ் டீக்கடைக்கு வாடா" என்றான்.
சரி என்று நானும் மாரியும் பைக்கில் புறப்பட்டோம்.
வழக்கமாக நண்பர்கள் நாங்கள் அந்த கலைக் கல்லூரி அருகில் உள்ள டீகடையில் தான் டீ குடிப்போம். அந்த கடைக்கு பக்கத்தில் தான் ராமுவின் வீடும் இருந்தது. அந்த கடைக்காரரும் நன்றாக எங்களுடன் பேசுவார். ராமு கடையில் இருந்தான் .
மூன்று பெரும் டீ சொல்லிவிட்டு கதை பேசிக்கொண்டு இருந்தோம்.
திடீரென்று எங்கள் பேச்சு இந்திய பொருளாதாரம் பற்றி எல்லாம் நீண்டு போனது.
அப்போதைய மத்திய நிதித் துறை மந்திரி, அவன் பொண்டாட்டி, பிள்ளைகள், எல்லாத்தையும் கண்டபடி திட்டிக் கொண்டே டீக்குடித்து முடித்தோம்.
ஒருமணி நேரம்தாண்டி போன எங்கள் பேச்சுக்கு முறுக்கு, மிக்சர், கடலை உருண்டை எல்லாம் தீனி ஆகியிருந்தது.
மாரி மணி என்னடா என்றான்.
எட்டே கால்டா என்றேன்.
வேகமாக ஓடிச் சென்று பைக் கண்ணாடியில் முகம் பார்த்து தலைவாரி முகம் கழுவினான்.
இது வழக்கமாக நடப்பதுதான். பத்தாவது படிக்கும் இவன் காதலி(இவன்தான் அப்படி சொல்லிக்கிட்டு திரியுறான்) டியுசன் முடிஞ்சு வரும். அத அப்படியே கொண்டே வீட்டுல விடுற வாட்ச்மேன் வேலைய பார்டைம்மா பாக்குறான். ஆனா அந்த பொண்ணு இவன திரும்பி கூட பாக்கிறது இல்ல.
அவுங்க அப்பா என்னவோ புள்ள பொறுப்பா குடும்பத்த கரை சேர்த்திடும் என்ற நம்பிக்கையில இருகாரு.. இது என்னன்னா இங்க பொண்ணுங்க பின்னாடி பொறுக்கிக்கிட்டு திரியுது. இதுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கு...எப்படி கரை சேர்க்க போகுதோ தெரியல...
அதோ அந்த பொண்ணு எங்கள கடந்து போனது...
மாரி குழந்தை மாதிரி ஹீ..ஹீ நு சிரிச்சிட்டு அந்த பொண்ணு பின்னாடியே பைக்கில் மெதுவா போனான்.
கடைக்காரரிடம் எவ்வளோ ஆச்சு என்றேன்.
அறுபத்தி எட்டு ரூபாய் ஐம்பது காசு என்றார்.
சட்டை பையில் கைவிட்டு துழாவி பார்த்தேன் , ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.
அதற்குள் ராமு இல்லடா...நான் தர்றேன் என்றான்.
சரி இந்த ஐம்பது ரூபாய சேர்த்து கொடு என்றேன்.
இல்லடா நான் தர்றேன்....என்கிட்டே இருக்கு என்றான்.
அவனையே கொடுக்க சொல்லிவிட்டு நான் விடைப் பெற்றேன். பைக்கை அந்த மாரி பரதேசி எடுத்து சென்று விட்டது. சுப்ரமணியபுரம் வரை நான் நடந்துதான் செல்லவேண்டும்.
நடக்கத் தொடங்கினேன்.சிறிது தூரமே சென்றிருப்பேன். நோட்டு புத்தகத்தை டீக்கடையில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
திரும்பி நடக்கத் தொடங்கினேன்.
கடையில் ராமுவை காணும்.
கடைக்காரரிடம் அண்ணே இங்க ஏதாவது நோட்டு இருந்துச்சா என்றேன்.
கூல் ட்ரிங்க்ஸ் டப்பா மேல இருக்கும் பாருப்பா என்றார்.
நல்ல வேலையாக நோட்டு அங்கேயே இருந்தது..நோட்டை
எடுத்துக் கொண்டு ராமு போய்ட்டானா என்றேன்.
இல்லப்பா... தம்பி வீட்டுக்கு காசு எடுக்க போயிருக்கு... அவர் சொல்லி முடிக்கவும்
அவன் வந்து இந்தாங்க அண்ணே என்பதற்கும் சரியாக இருந்து.
என்னை பார்த்ததும் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு , டேய் நீ இன்னும் போகலியா என்றான்.
அது கிடக்கட்டும் நீ எங்க இங்கே என்றேன்.
இல்லடா...அம்மா தயிர் வாங்கிட்டு வர சொன்னுச்சு அதான் வந்தேன் என்றான்.
ஏன்டா உனக்கெல்லாம் எங்களப் பார்த்தா எப்படி இருக்கு...நான் தான் காசு குடுக்குறேன்னு சொல்லிட்டேன். நான் குடுத்தா என்ன.. இல்ல நீ குடுத்த என்ன...அதுக்கு ஏன்டா இப்படி...அப்ப நாங்கல்லாம் உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாட்டுக்கு காசு கொடுக்கணும்.என்னென்னவோ பேசினேன். அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்து நின்று கொண்டிந்தது. ஒரு வேலை அதிகமா திட்டிட்டமோ என்றுகூட தோன்றியது.
கண்ணா பின்னவென்று கத்திவிட்டு , நோட்டை எடுத்துக் கொண்டு திரும்பி வீடு நோக்கி நடந்தேன்.
தெரு விளக்கின் ஓரமாக வந்ததும் நோட்டை பிரித்துப் பார்த்தேன்...கிழிந்த பக்கங்களின் இடையே மெல்லிய மயிலிறகும் இருந்தது....
பசி வயிற்றை நெருங்கி இருந்தது. இரண்டு மூன்று விளக்கு கம்பங்களை தாண்டி வந்ததும் மீண்டும் நோட்டை திறந்து பார்த்தேன்.
மயிலிறகையும் சில கிழிந்த பக்கங்களையும் காணவில்லை.
திரும்பி விளக்கு வெளிச்சத்தில், குனிந்து கொண்டே தேடிக்கொண்டு வந்தேன். எதிரில் வந்த வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தில் அப்படியே நின்று விட்டேன்... திட்டிக் கொண்டே இறங்கினான் வண்டிக்காரன்.
அட..நம்ம மாரி.
என்னடா பண்ற என்றான்.
ஒன்னும் இல்லடா..நோட்டு கிழிஞ்சு இருந்துச்சு..அதுல சிலது வர்றப்ப கீழ விழுந்துடுச்சு என்றேன்.
அவனும் என்னோடு சேர்ந்து தேடினான்.
பிரேக் அடித்து சைக்கிளை நிறுத்தினான் ராமு.
என்னடா என்றேன்.
இல்லடா நீ பாட்டுக்கு மயிறு போச்சுன்னு திட்டிட்ட...ஒருமாதிரி இருந்துச்சு. அதான் சைக்கிள எடுத்துகிட்டு... என்று நிறுத்தினான்.
என்ன பாக்கலாம்....சாரி கேக்கலாம்னு வந்தியாக்கும் என்று நக்கலாக கேட்டேன்..
இல்லடா மாமா வீட்டுக்கு போலாம்னு வந்தேன்...பானு வந்திருக்காடா என்றான்(அவன் மாமா பொண்ணு ).
என் கோபம் அதிகரிக்க தொடங்கியது... சரி நீ கிளம்பு... போடா...போயி பானுவ பாரு போடா என்று அதட்டினேன்.
அவ கிடக்கா...நீங்க என்னடா பண்றீங்க இங்க என்றான்.
சொல்லி முடித்தேன்...
சிறிது நேர தேடலுக்கு பிறகு சாலையோரமாக கிடந்த அந்த நோட்டு பக்கங்களை எடுத்து வந்து ராமுவே கொடுத்தான்.
வாங்கியது அவசர அவசரமாக மயிலிறகை தேடினேன்.
ஏதோ இரண்டு பக்கங்களோட ஒட்டிக் கொண்டு இருந்தது.
நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
மாரியும் ராமுவும் ஒரே குரலில் கத்தினார்கள்.
"இந்த பொழப்புக்கு சிவன் கோயிலில் செருப்புக்கு டோக்கன் போடலாம்டா என்றார்கள்..."
எதையோ சாதித்தது போல நிம்மதியா தூங்கினேன்..இருக்காதா பின்ன...
ஆண்டவன் கொடுக்குறத தொலைச்சிட்டு அதையே தேடி அலைஞ்சு கிடைச்சதும் சந்தோசப் படுற மனச குழந்தைனு சொல்லாம வேற எப்படி சொல்லுறது...

Thursday, March 12, 2009

கனவில் நிகழ்ந்த கலவி

உதிர்ந்த

மல்லிகை

உடைந்த

வளையல்

கிழிந்த

தாவணி

வார்த்தைகளற்ற

மௌனம்

எதுவும் இல்லை...

சாட்சிகளின்றி

கனவில் நிகழ்ந்த

வன்கலவியில்.

Wednesday, March 11, 2009

மீண்டும் கல்லூரி

தேன்மிட்டாய்,

லைம் ஜூஸ்,

மாவுருண்டை,

சூடம் மிட்டாய்,

இலந்தை அடை,

குளத்தங்கரை ,

அப்பாஸ் பஸ்,

ஆர்ட்ஸ் காலேஜ் பெண்கள் ,

கொல்லங்காளி கோவில்,

முருகன் கடை டீ,

அரிசி முறுக்கு,

பழ சர்பத்,

யாரோ ஒரு மேடம்

எதற்காவது

செல்ல வேண்டும்

கல்லூரிக்கு.

மீண்டும்

வெட்கமின்றி...

நே(நி)சம் இழந்த மனிதம்

ஆடு,
நாய்,
பூனைக்குட்டி,
வாத்து,
புறா,
முயல்,
கோழி,
மாடு,
மீன்
அனைத்தும்
நேசிக்கப்படுகிறது
காரணங்களுடன் அல்லது
காரணமின்றி
மனிதனைத் தவிர !

Tuesday, March 10, 2009

மனிதர்களாக...மிருகங்களோடு...

ஊன்றுகோல்

பெண்ணிற்காக

நிறுத்தப்படுகிறது

சிக்னல் - கடந்து

செல்லும் வரை.

கொஞ்சமாயினும்

கொடுக்கப்படுகிறது

உணவு -எச்சில்

படுத்தாமல்.

உறுப்புகள்

தொடாமலே

கொஞ்சப்படுகிறது

குழந்தைகள் - வேறு

நினைவுகள் அற்று.

தனியாகவே வீடு

திரும்புகிறார்கள்

பெண்கள் - நள்ளிரவில்

யாருமின்றி.

மேலாடை ஒதுங்கிய

மேனித் தவிர்க்கும்

கண்கள் - ஆகாயம்

நோக்குகிறது.

காசு, பணமின்றி

கிடைக்கிறது

கல்வி - ஒன்றாக

அனைவருக்கும்.

உயிர்

பறிக்காமல்

விடப்படுகிறது

பூக்கள் - சிலருக்கு

உதவுவதற்காக.

மரணத்துக்கு

பின்னும் செய்யப்படுகிறது

தானம்- யாருக்கேனும்

பயன்படுமென்று .

இடதோ, வலதோ

கையினால்

இடப்படுகிறது

தர்மங்கள்- பலருக்கு

காரணமின்றி.

வறண்ட

நிலங்களில் பெய்யும்

சில நேரத்து

மழைப்போல

இன்னும் சில

கடவுள்கள்

இருக்கத்தான்

செய்கிறார்கள்.

உருவமாகவோ, அருவமாகவோ

மனிதர்களாக...

மிருகங்களோடு!!!

அப்பாவைக் கெடுத்த அம்மா

முன்பைவிட

அதிக பாசமாக இருக்கிறார்.

ஆசைப்படுவதை எல்லாம்

வாங்கித் தருகிறார்.

நேரத்திற்கு வீட்டிற்கு

வருகிறார் - அவராகவே

சமைக்கிறார், துவைக்கிறார்,

சுத்தம் செய்கிறார்.

சிகரெட், விஸ்கி

இன்றி இருக்கிறார்.

அச்சுறுத்தும் இரவுகளில்

அருகிலேயே உறங்குகிறார்.

எல்லாம் சரியாக இருக்கிறது

"அம்மா ஓடிப் போனதிலிருந்து "

சில நாட்களாக

குளிக்கும்பொழுது

யாரோ

பார்ப்பதாகவே

தோன்றுகிறது.

யாருமில்லாத வீட்டில்

யாராக இருக்கும்

அப்பாவைத் தவிர ?

வியாபாரம் (விபச்சாரம்)

குறைவாகவும்
நிறைவாகவும்
இருக்கிறது.
என் தேவைகள்...
ஒரு வேளைச் சோறு
ஒரு பீர்
ஒரு ஐம்பது ரூபாய்
ஒரு மணி நேரத்திற்கு
மட்டும்.

போர் தொழில் பழகு

தவளும்போதே

தெரிந்து கொள்கிறது.

குழந்தை...சண்டையிட...

முட்டு...முட்டு...முட்டு...

முட்டேய்ய்ய்ய்ய்...

எப்பொழுதும்... காமம்

உயர்த்த
முடியாத
தீப்பந்தமாக
காமம்
இருள் தேடி
அலைகிறது !
சுடர் தேடியோடும்
மின்மினி போல
எப்பொழுதும்...

ஆண் உறை

நசுக்கி

தூக்கி எறியப்படும்

சிகரெட் துண்டின்

கடைசியாய்

சாலையோரம் கிடக்கிறது.

ஓர் இரவு காதல்...

காத்திருப்பு...

நீ

கிழித்து

எறிவதற்காகவே

சில கவிதைகளும்

ஒரு இதயமும்

காத்துக் கிடக்கிறது !

சொந்தம்

என்றோவொரு நாள்

ஆகாயத்தில்

வெடித்துச் சிதறிய

யாரோ ஒருவனின்

நுண்ணிய சதைத்துகள்

யாரோ வீட்டு

பூஜை அறையில்

சுடராக

ஒளிர்ந்து கொண்டிருக்கும் !

வன்மம்...

நீண்ட நாள்
பிரிவிற்கு
பின்னேயான
சந்திப்பிலும்
உன் கண்ணில்
மிஞ்சி இருக்கும்
வன்மம்...
காதலாகவே
கொள்கிறது
மனது.