Sunday, February 8, 2009

இரண்டு நிமிடம்...ஒன்லி டூ மினிட்ஸ்...

நேற்று அலுவலகத்தில் வேலை நிறைய இருந்ததால் அசதியில் சற்று அதிகமாக தூங்கிவிட்டேன். விழித்துப் பார்த்தபோது மணி காலை ஏழாகிவிட்டது. அவசர அவசரமாய் படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு குளியலறைக்குள் நுழைய முற்பட்டேன்.
"சீக்கிரம் வந்துடுடா " என்றான் நண்பன்.
இரண்டு நிமிஷத்தில வந்திடுறேண்டான்னு உள்ள போயிட்டு அஞ்சு நிமிஷம் கழித்துதான் வந்தேன்.
நண்பன் வெறித்துப் பார்த்தான்...
அவன் கோவத்தை தவிர்க்க, சிரிச்சுகிட்டே சாரி சொல்லிட்டு ஆபிஸ் போயிட்டேன்
மாலை நாலரை மணியளவில் நண்பனிடமிருந்து கால் வந்தது...
"சாயங்காலம் ஏழரை மணிக்கு சியர்ஸ் பாருக்கு வாடா "
சரிடானு சொல்லி வச்சுட்டேன்.
சற்று முன் வந்த போன் கால் பத்தியே நினைவு சுற்றி வந்தது. அன்று புதன் கிழமை . நார்மலா நாங்க வேலை நாட்களில் பாருக்கு போகமாட்டோம். என்ன பிரச்சனையா இருக்கும். எதுவா இருந்தாலும் அங்கபோயி பாத்துக்கலாம்னு நினைத்துக் கொண்டேன்.
ஆறு மணிக்கு ஆபிஸ் முடிச்சு, தி.நகர் பஸ் புடிச்சு சியர்ஸ் பாருக்குள் நுழைந்தபோது ஏழேகால் ஆயிடுச்சு. எனக்கு முன்பாகவே நண்பன் குடிக்க ஆரம்பித்து இருந்தான். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. இவனுக்கு என்னாச்சு இன்னைக்கு என்று யோசித்தபடி, எனக்கு ஸ்காட்ச் விஸ்கி ஆர்டர் செய்தேன்.
"என்னடா ஆச்சு உனக்கு" என்றேன்.
"ஒண்ணுமில்லை" என்றான்.
"அப்புறம் ஏன்டா புதன் கிழமை போதையில இருக்க".
"காலையில நீ என்ன சொன்ன " என்றான்.
"ஒன்னும் சொல்லலியே" என்றேன்.
"நல்ல யோசிச்சுப்பார்"
"ம்ம்...தெரியலடா...நீயே சொல்லு...
"ரெண்டு நிமிஷம் சொன்னல்ல..."
ஆமாம்..அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்...புரியாமலே கேட்டேன்...
அவ அப்படித்தான் சொல்லுவா... அவன் கண்கள் கலங்கியிருந்தன...
மெல்ல புரியத் தொடங்கியது...நான் சொன்ன வார்த்தை, அவன் காதலை நினைவு படுத்திவிட்டது...
அவனிடம் சாரி...சொன்னேன்...
அவனே பேசத் தொடங்கியிருந்தான்...
அப்பல்லாம் சோறு தண்ணி இல்லாம அவகூட பேசிக்கிட்டு இருப்பேன்...என்னமோ தெரியல அப்ப நான் ரொம்பவே சந்தோசமா இருப்பேன்..ரொம்பவே...
பத்து பதினைந்து முறை போன் பண்ணுவா...
ஒரு நாளைக்கா...
இல்லடா ஒரு மணி நேரத்துல... சுடு தண்ணி வைக்கிறதுல இருந்து சோறு குழம்பு வைக்கிறது வரைக்கும் சந்தேகம்னா எனக்கு போன் பண்ணுவா...
திடீர்னு போன் பண்ணுவா...நான் பிசியா இருக்கேன்... அப்புறம் பேசுறேன்னு சொன்ன... இரண்டு நிமிஷம்...ஒன்லி டூ மினிட்ஸ்னு...சொல்லுவா...அவ சொல்லுறத கேக்குறதுக்கு கோடிஆயிசு வேணும்டா...
இப்பத்தான் தெளிவா இரண்டு நிமிஷ கதையே எனக்கு புரிய ஆரம்பிச்சது...
அவனை பார்க்கும்போது பரிதாபமா இருந்துச்சு...
ஒரு மென்பொருள் கம்பெனில சீனியர் கன்சல்டன்ட்...அவன்கிட்ட ஏழெட்டு பேரு வேலை பாக்குறாங்க.. குழந்தைங்க மாதிரி வார்த்தை தடுமாறி கண்ணு கலங்கி மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...
"டேய்...நான் பேசிக்கிட்டே இருக்கேன்.நீயென்ன மயிரா புடுங்குற.." கத்தினான்.
நம்முடைய சரி, தவறுகள் ஏற்படுத்தும் கோவம் எவ்ளோ விகாரமானது புரிஞ்சுக்க முடிஞ்சது.
சரி சொல்லுடா.. என்றேன்.
ஏதேதோ பேசினான்...இடையிடையே நான்தாண்டா தப்பு பண்ணிட்டேன்...அவ நல்லவடா..எனக்குதான் கொடுப்பினை இல்லைன்னு வேற புலம்பி கொண்டே வந்தான்.
பில் செட்டில் பண்ணிட்டு , ஹோட்டல் போயி சாப்பிட்டுட்டு பஸ் புடிச்சு ரூமுக்கு வந்து அவனை தூங்க வச்சிட்டு ஒரு சிகரெட் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போனேன்.
தூரமா யாரோ குழாயில தண்ணி அடிச்சுகிட்டு இருந்தாங்க...பக்கத்து வீட்டுல இருந்து தாலாட்டு பாட்டும் குழந்தை அழற சத்தமும் கேட்டுகிட்டு இருந்துச்சு...
கொஞ்சம் நேரம் கழிச்சு கீழ வந்து படுத்தா தூக்கம் வரலை .
யாரோ அழுத கண்ணீரும், குடிச்சுட்டு போட்ட சிகரெட்டும் அங்கேயே கிடந்திருக்கும்...

1 comment: