Monday, February 2, 2009

கடவுளும் நானும் - புத்தகப் பார்வை

"கடவுளும் நானும்"--- சாரு நிவேதிதா

"நாஸ்திகர்களோ, பகுத்தறிவாதிகளோஇந்த புத்தகத்தைப் படித்து சிரமப்பட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறார். தான் கடவுளிடம் சாட்சி கேட்டு நின்றவன்.சாட்சி கிடைத்தது நம்புகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார். வெவ்வேறு காலங்களில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி புத்தகம் முழுவதும் சொல்லுகிறார்.
சில இடங்களில் பிறருக்கு நிகழ்ந்ததையும் சொல்லிச்செல்லும் விதத்தில் நம்மை இறை அனுபவத்துடன் நெருங்க செய்கிறார். "கவிதைப் பயிற்சிக்கு செல்லாத நீர் எப்படி கவிதை எழுதுகிறீர்?" என்ற கேள்விக்கு ப்ராட்ஸ்கியின் பதிலாக "என் கவிதைகள் எனக்கு கடவுளால் அனுப்ப படுகின்றன...". வைணவம், பாவ்லோ கொய்லோ, நிகோஸ் கசன்சாகிஸ் பற்றியும் சிலாகித்து சொல்லி இருக்கிறார். சமஸ்கிருத வகுப்பில் ஆப்பம், பாய சாப்பிட்டதாக சொன்னதும் , நர மாமிச பட்சினியை போல பார்த்தனர் என்பதும் நல்ல நகைச்சுவை.

"கடவுளை நம்பாத எழுத்தாளனே உலகில் இல்லை" அழுத்தமான நம்பிக்கை. நிதர்சனமான வரிகள். "நரகம் என்றால் என்ன?" என்ற கேள்வியின் பதிலாக " அன்பு செலுத்த இயலாமல் போவதே நரகம்" என்ற வரிகள் கண்ணீர் துளிர்க்க செய்கிறது. நாகூர் ஆண்டவரின் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவரைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார். இஸ்லாம் இந்தியாவில் நிலைப் பெறக் காரணமாக சூபியை சொல்லுகிறார். வாரணாசியில் சாமுண்டி தெய்வத்துடனான இறை அனுபவக் கவிதைகள் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.
மந்தைவெளியில் இருந்து திருவெற்றியூர் பட்டினத்தார் சமாதிக்கு பேருந்தில் சென்ற நிகழ்ச்சி நம் சமூகத்தின் எதார்த்த அவலம்.நம் நாட்டில் பெருகிவரும் கள்ளத் தொடர்புகளை பட்டினத்தார் சொல்லி இருப்பது நிதர்சனம்தானே. அந்த பாடல் கீழே ...

"கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையெடுத்து
அப்புறம்தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்புவந்து உறங்குவளை
எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே!"


மொழிப்பெயர்ப்பு கஸல் கவிதை. அழகியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு...

"காதலையும் தர்க்கத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்தேன்
சமுத்திரத்தில் விழும்
ஒரு மழைத்துளிதான்
தர்க்கம்..."


பிஸ்மில்லா கானின் பாலாஜி கோவில் இறை அனுபவம் நெகிழ்ச்சியான ஒன்று. ஷீரடி சாய் பாபாவின் புகைப்படத்திலிருந்து திருநீறு கொட்டிய நிகழ்ச்சி என்பது சாருவின் மூலம் கேட்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை...
ஆன்மீகமும், மதமும் காசு, பணம் தொடர்புடையதாக மாறிவிட்ட காலங்களில், இறை அனுபவத்தை அவருடைய சொந்த அனுபவங்களில் இருந்தே விளக்கி இருக்கிறார்.செய்கின்ற செயலில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் கடவுளை அடையாளம் என்பதே கர்ம யோகம். நமக்குள் இருக்கின்ற மிருகம் இறந்துவிடும்போது, கடவுளை கண்டறிந்து விடுகிறோம். வாழ்க்கை என்பது அதுதானே...

No comments:

Post a Comment