Saturday, February 28, 2009

வெற்றி...தோல்வி...

நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையில்
உருளும்
வெற்றி தோல்வி
கடவுளாகி விடுகிறது!

எனக்கே எனக்காக

"தூரமாய்
தொலைவிலிருக்கும்போது
பாறையாக தெரிந்தாலும்
அருகிலே தெரியும்
நீ
கல்லுக்குள் ஈரம்."

- தோழர்.பூங்குமரன்

பி.மு மற்றும் பி.பி

பிரிவுக்கு முன்

நானென்பது நீயே!

பிரிவுக்கு பின்

நானென்பது

நீயல்லாத

வேறொரு பெண்.

உண்மை எது

ஆண் எனப்படுவதும்,

பெண் எனப்படுவதும்,

அனுபவித்தும்

அறிவது இல்லை.

ஊண் என்பது

உண்மை அன்றென!

போதனை

--------------------
பேதங்களின்
வழியே
போதித்து
செல்கிறது
வாழ்க்கை!
--------------------
பூக்கள் என்ன
ஜென் துறவிகளா
மௌனமாகவே
போதிக்கிறது!
--------------------

மாற்றம் என்பது

நோக்கியா - ஏர்டெல்,
சோனி - ஸ்பைஷ்,
பானசோனிக் - ஏர்செல்,
மோட்டரோலா - வோடபோன்,
சாம்சங் - ஐடியா
ரிலையன்ஸ்
ஆண் பெண்ணை,
பெண் ஆண்ணை
(ஏ) மாற்றும்போது
மாறிவிடுகிறது.
மொபைலும்,
ஆபரேட்டரும்!
தற்போது,
புதிதாக
வர்ஜின்,
ஆண்
பெண்.

அடையாளங்களாய்

சோனி எரிக்சன்,

டெல்,

ஆப்பிள்,

நிக்கான்,

பிளாக்பெர்ரி

இவைகளோடு

மிஞ்சி இருக்கிறது

வாழாத வாழ்க்கையின்

அடையாளம்!

கடவுள்

ஆம்?
இல்லை?
கடவுள்,
இல்லையாம்.

உயிர்விடும்போது

உயர்ந்த கல்வி,
நிறைந்த புகழ்,
குவிந்த செல்வம்
ஒன்றுமே
துணையில்லை
உயிர்விடும்போது!


Thursday, February 26, 2009

தைரியம் வந்தபிறகு...

அதிகாலை

மென்காற்றின்

சுகத்தோடு

உறங்கிக்கொண்டே

இருக்கிறாய்.

நான்

எழுந்த பிறகும்!

நகங்கள் கீறிய

மார்பும்,

பற்கள் கிழித்த

கீழுதடும்,

இன்னும் சில இடங்களும்

எரிந்து கொண்டே

இருக்கிறது.

என்றாவதொரு நாள்

உன் ஆண்குறி கீறி

வலி உணரச் செய்வேன்.

தைரியம் வந்தபிறகு...

நிழற்பட கருவி..

உதவிக்கு
யாருமற்று,
நிழற்பட கருவியை
முக்காலியில்
பொருத்தி
தானியங்கி விசையை
அழுத்திவிட்டு
எதிரில் நின்றேன்.
கிளிக்...
நிழல் விழாத
பிம்பம் பதிவானது,
பசுமையான
பின்புலத்தோடு
தனியாக.
வலி உணர்ந்தது மனது!
நானென்பது
வேறு யாருமற்ற
நான் மட்டுமென்று...

Tuesday, February 24, 2009

மீண்டும் பாரதிக்கு...

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவை

நேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன்

முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்

மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி

என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங்

கவலையறச் செய்து -மதி

தன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

- பாரதி

உரிமையோடு கடவுளிடம் பேசுகிறான். வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் சத்தியம் தெறிக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் பணிசெய்து இறந்தவனை கனவில் சந்தித்தபோது கேட்டே விட்டேன். சாகித்திய விருது வாங்க எந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டுமென. சிரித்து விட்டு சென்றுவிட்டான். தூக்கம் களைந்து யோசித்த வேளையில் பாரதிக்கு ஏன் பாரத ரத்னா கொடுக்கவில்லை என்ற கேள்வி வந்தது.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Tuesday, February 17, 2009

மாயப் பிசாசு!

மயிலாக வந்துநிற்கும்

மாயப் பிசாசு!

மார்பு முலைகாட்டி

மயக்கிடுமே அவள் தேகம் !

கூடும் இன்பத்தை

கொடுக்கின்ற துர்புத்தி

தானதனால் கொள்வானே

அவள் தேகம் குணமிழந்து !

விவேகம் அறியாமல்

வினைவலியும் உணராமல்

சீறும் வினையதுவின்

சிநேகத்தில் வீழ்வானே !

தேகம் பொய் மறந்து

வேகம் தனதாக்கி

வீழ்வானே...காமப்பேயின்

கடுஞ்சிறையில்...தானாக !

நாணந்தனை இழந்து

நடுவீதி தானின்று

பார்வையிலே பேசினாலும்

பாவையவள்

கூற்றுவன் தூதன் தானே !

கோதையவள் தீது என்றுணர்ந்து

பேதை மனத்தை நீ பிடிப்போடு இருக்கச்செய்

என் இறைவா !!!

பட்டினத்து அடிகளின் பாடலைப் படித்துவிட்டு எழுதியது...

யார் இவர்கள்...

தேடும் இடந்தன்னில்

சேராமல் தானொதுங்கி நின்று

வாடும் இடம் சேர்ந்தே வாழ்ந்திடுவார்.

கேடும் புரியார்! கெட்டவர்கள் அடிசேரார்

வேடம் தான் ஏனோ!

விம்மலும் தானேனோ!

ஏனோ வரவில்லை அவள்

உண்ணும் நிலையாலே
உயிர் அடையும் இன்பமெல்லாம்
உனை எண்ணும் நிலையாலே
இவன் அடைய மாட்டானோ!

கன்னி அவள் நினைவு
கண் நிறைந்து நின்றாலும்
சொன்ன நாளில் அவள்
மலர் சூட வரவில்லை!

வஞ்சம் செய்தாலும்
நெஞ்சகத்தே வலியில்லை.
கொஞ்சியவள் வார்த்தைகளில்
கோபம் மறந்தானே!

கன்னி நெஞ்சதுவோ...
கல் நெஞ்சதுவோ...
பிஞ்சு மனதாலே
பேதலித்து
புலம்புகிறான்!
கோதையவள் பேச்சில்
போதையானான்
யார் இவனோ...

குற்றவாளி தப்பிவிட்டாள்

சம்பவம் நிகழ்ந்தது

பேருந்து நிறுத்தத்தில்..

வெடித்தது குண்டு.

தொலைவிலிருந்து இயக்கப்பட்டுள்ளது .

இயக்கியது ஒரு பெண்.

குற்றவாளி தப்பிவிட்டாள்

பாதிப்பு இவனுக்கு மட்டுமே...

யாசகம்.

தன்னைப்போலவே
பிறரையும் நேசி...
எனவே மறுக்கப்பட்டது
யாசகம்.

புதுமணத் தம்பதிகள்

தொலையாத
தீப்பெட்டிக்கு
அடுக்களையில்
சண்டை...
புதுமணத் தம்பதிகள்

குற்றஉணர்ச்சி

யாரும்
எதிர்பாராத கணங்களில்
நிகழ்ந்துவிடுகிறது.
கற்பிழந்தவனும்
இழக்கச்செய்தவளும் - ஒரே
பேருந்து நிறுத்தத்தில்
வெவ்வேறு
குற்றஉணர்ச்சியில்...

போர் ஆட்டம்

எதையாவது செய் - மனம்
இதையே செய் - புத்தி
ஏன் செய்ய - உடல்
அனைவருக்குமான
போராட்டத்திற்கு முன்பே
தொடங்கிவிட்டிருக்கிறது
எனக்கான போராட்டம்...

Sunday, February 8, 2009

இரண்டு நிமிடம்...ஒன்லி டூ மினிட்ஸ்...

நேற்று அலுவலகத்தில் வேலை நிறைய இருந்ததால் அசதியில் சற்று அதிகமாக தூங்கிவிட்டேன். விழித்துப் பார்த்தபோது மணி காலை ஏழாகிவிட்டது. அவசர அவசரமாய் படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு குளியலறைக்குள் நுழைய முற்பட்டேன்.
"சீக்கிரம் வந்துடுடா " என்றான் நண்பன்.
இரண்டு நிமிஷத்தில வந்திடுறேண்டான்னு உள்ள போயிட்டு அஞ்சு நிமிஷம் கழித்துதான் வந்தேன்.
நண்பன் வெறித்துப் பார்த்தான்...
அவன் கோவத்தை தவிர்க்க, சிரிச்சுகிட்டே சாரி சொல்லிட்டு ஆபிஸ் போயிட்டேன்
மாலை நாலரை மணியளவில் நண்பனிடமிருந்து கால் வந்தது...
"சாயங்காலம் ஏழரை மணிக்கு சியர்ஸ் பாருக்கு வாடா "
சரிடானு சொல்லி வச்சுட்டேன்.
சற்று முன் வந்த போன் கால் பத்தியே நினைவு சுற்றி வந்தது. அன்று புதன் கிழமை . நார்மலா நாங்க வேலை நாட்களில் பாருக்கு போகமாட்டோம். என்ன பிரச்சனையா இருக்கும். எதுவா இருந்தாலும் அங்கபோயி பாத்துக்கலாம்னு நினைத்துக் கொண்டேன்.
ஆறு மணிக்கு ஆபிஸ் முடிச்சு, தி.நகர் பஸ் புடிச்சு சியர்ஸ் பாருக்குள் நுழைந்தபோது ஏழேகால் ஆயிடுச்சு. எனக்கு முன்பாகவே நண்பன் குடிக்க ஆரம்பித்து இருந்தான். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. இவனுக்கு என்னாச்சு இன்னைக்கு என்று யோசித்தபடி, எனக்கு ஸ்காட்ச் விஸ்கி ஆர்டர் செய்தேன்.
"என்னடா ஆச்சு உனக்கு" என்றேன்.
"ஒண்ணுமில்லை" என்றான்.
"அப்புறம் ஏன்டா புதன் கிழமை போதையில இருக்க".
"காலையில நீ என்ன சொன்ன " என்றான்.
"ஒன்னும் சொல்லலியே" என்றேன்.
"நல்ல யோசிச்சுப்பார்"
"ம்ம்...தெரியலடா...நீயே சொல்லு...
"ரெண்டு நிமிஷம் சொன்னல்ல..."
ஆமாம்..அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்...புரியாமலே கேட்டேன்...
அவ அப்படித்தான் சொல்லுவா... அவன் கண்கள் கலங்கியிருந்தன...
மெல்ல புரியத் தொடங்கியது...நான் சொன்ன வார்த்தை, அவன் காதலை நினைவு படுத்திவிட்டது...
அவனிடம் சாரி...சொன்னேன்...
அவனே பேசத் தொடங்கியிருந்தான்...
அப்பல்லாம் சோறு தண்ணி இல்லாம அவகூட பேசிக்கிட்டு இருப்பேன்...என்னமோ தெரியல அப்ப நான் ரொம்பவே சந்தோசமா இருப்பேன்..ரொம்பவே...
பத்து பதினைந்து முறை போன் பண்ணுவா...
ஒரு நாளைக்கா...
இல்லடா ஒரு மணி நேரத்துல... சுடு தண்ணி வைக்கிறதுல இருந்து சோறு குழம்பு வைக்கிறது வரைக்கும் சந்தேகம்னா எனக்கு போன் பண்ணுவா...
திடீர்னு போன் பண்ணுவா...நான் பிசியா இருக்கேன்... அப்புறம் பேசுறேன்னு சொன்ன... இரண்டு நிமிஷம்...ஒன்லி டூ மினிட்ஸ்னு...சொல்லுவா...அவ சொல்லுறத கேக்குறதுக்கு கோடிஆயிசு வேணும்டா...
இப்பத்தான் தெளிவா இரண்டு நிமிஷ கதையே எனக்கு புரிய ஆரம்பிச்சது...
அவனை பார்க்கும்போது பரிதாபமா இருந்துச்சு...
ஒரு மென்பொருள் கம்பெனில சீனியர் கன்சல்டன்ட்...அவன்கிட்ட ஏழெட்டு பேரு வேலை பாக்குறாங்க.. குழந்தைங்க மாதிரி வார்த்தை தடுமாறி கண்ணு கலங்கி மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...
"டேய்...நான் பேசிக்கிட்டே இருக்கேன்.நீயென்ன மயிரா புடுங்குற.." கத்தினான்.
நம்முடைய சரி, தவறுகள் ஏற்படுத்தும் கோவம் எவ்ளோ விகாரமானது புரிஞ்சுக்க முடிஞ்சது.
சரி சொல்லுடா.. என்றேன்.
ஏதேதோ பேசினான்...இடையிடையே நான்தாண்டா தப்பு பண்ணிட்டேன்...அவ நல்லவடா..எனக்குதான் கொடுப்பினை இல்லைன்னு வேற புலம்பி கொண்டே வந்தான்.
பில் செட்டில் பண்ணிட்டு , ஹோட்டல் போயி சாப்பிட்டுட்டு பஸ் புடிச்சு ரூமுக்கு வந்து அவனை தூங்க வச்சிட்டு ஒரு சிகரெட் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போனேன்.
தூரமா யாரோ குழாயில தண்ணி அடிச்சுகிட்டு இருந்தாங்க...பக்கத்து வீட்டுல இருந்து தாலாட்டு பாட்டும் குழந்தை அழற சத்தமும் கேட்டுகிட்டு இருந்துச்சு...
கொஞ்சம் நேரம் கழிச்சு கீழ வந்து படுத்தா தூக்கம் வரலை .
யாரோ அழுத கண்ணீரும், குடிச்சுட்டு போட்ட சிகரெட்டும் அங்கேயே கிடந்திருக்கும்...

Monday, February 2, 2009

ப்ளீஸ்!இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - புத்தகப் பார்வை

"ப்ளீஸ்!இந்த புத்தகத்தை வாங்காதீங்க!"---கோபிநாத்
தலைப்பில் இருக்கும் விளம்பரத் தந்திரம் முன்னுரையோடு தொடக்கத்திலேயே முடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது."இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிதாக சொல்லிவிடவில்லை ". ஆர்ப்பட்டமில்லாமல் தொடங்குகிறார்.
கருத்துக்களை தலைப்புகளுக்குள் விவரிக்காமல், கருத்துக்களையே தலைப்பாக்கி இருக்கிறார். பதினைந்து கருத்துமே நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையை மாற்றமடையச் செய்யும்.படிக்கும் போது கோபி தொலைக்காட்சியில் பேசுவது போலவே ஒரு உணர்வு ஏற்படத்தான் செய்கிறது.
சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதற்கு பதிலாக, துக்கமாகி விடக்கூடாது என்று வாழ்கின்ற வாழ்வியலை சரியாக சொல்லி இருக்கிறார். எந்த கணத்தையும் சுவாரஸ்யமாக்கிக் கொள்ள நாம்தான் கவனிப்பதில்லை என்பது உறைக்கின்ற உண்மை. நிறைய விசயங்களில் நாமே நமக்கு தடையாக இருக்கிறோம் என்ற உண்மையை அறிய முடிகிறது.
* சந்தோசமாக இருங்கள்.
* வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக் கொள்ளுங்கள்.
* பிரச்சனைகளை ஒதுக்கி வைக்காதீர்.
* உங்களை நேசியுங்கள்.
* அன்பு செலுத்துங்கள்.
* திறந்த மனதோடு இருங்கள்.
* எதிர்மறை மனிதர்களிடம் கொஞ்சம் விலகியிருங்கள்.
அச்சிட்ட முறையும்,புகைப்படங்களின் தரமும் கொஞ்சம் சரி செய்து இருக்கலாம். வாழ்க்கை முழுவதும் உங்களுடனே வைத்திருக்க ஒரு நல்ல தோழனாக, உங்களுடைய மனசாட்சியை சந்தோசப் படுத்துகின்ற புத்தகமாகவே கருதலாம்.

கடவுளும் நானும் - புத்தகப் பார்வை

"கடவுளும் நானும்"--- சாரு நிவேதிதா

"நாஸ்திகர்களோ, பகுத்தறிவாதிகளோஇந்த புத்தகத்தைப் படித்து சிரமப்பட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறார். தான் கடவுளிடம் சாட்சி கேட்டு நின்றவன்.சாட்சி கிடைத்தது நம்புகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார். வெவ்வேறு காலங்களில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி புத்தகம் முழுவதும் சொல்லுகிறார்.
சில இடங்களில் பிறருக்கு நிகழ்ந்ததையும் சொல்லிச்செல்லும் விதத்தில் நம்மை இறை அனுபவத்துடன் நெருங்க செய்கிறார். "கவிதைப் பயிற்சிக்கு செல்லாத நீர் எப்படி கவிதை எழுதுகிறீர்?" என்ற கேள்விக்கு ப்ராட்ஸ்கியின் பதிலாக "என் கவிதைகள் எனக்கு கடவுளால் அனுப்ப படுகின்றன...". வைணவம், பாவ்லோ கொய்லோ, நிகோஸ் கசன்சாகிஸ் பற்றியும் சிலாகித்து சொல்லி இருக்கிறார். சமஸ்கிருத வகுப்பில் ஆப்பம், பாய சாப்பிட்டதாக சொன்னதும் , நர மாமிச பட்சினியை போல பார்த்தனர் என்பதும் நல்ல நகைச்சுவை.

"கடவுளை நம்பாத எழுத்தாளனே உலகில் இல்லை" அழுத்தமான நம்பிக்கை. நிதர்சனமான வரிகள். "நரகம் என்றால் என்ன?" என்ற கேள்வியின் பதிலாக " அன்பு செலுத்த இயலாமல் போவதே நரகம்" என்ற வரிகள் கண்ணீர் துளிர்க்க செய்கிறது. நாகூர் ஆண்டவரின் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவரைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார். இஸ்லாம் இந்தியாவில் நிலைப் பெறக் காரணமாக சூபியை சொல்லுகிறார். வாரணாசியில் சாமுண்டி தெய்வத்துடனான இறை அனுபவக் கவிதைகள் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.
மந்தைவெளியில் இருந்து திருவெற்றியூர் பட்டினத்தார் சமாதிக்கு பேருந்தில் சென்ற நிகழ்ச்சி நம் சமூகத்தின் எதார்த்த அவலம்.நம் நாட்டில் பெருகிவரும் கள்ளத் தொடர்புகளை பட்டினத்தார் சொல்லி இருப்பது நிதர்சனம்தானே. அந்த பாடல் கீழே ...

"கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையெடுத்து
அப்புறம்தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்புவந்து உறங்குவளை
எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே!"


மொழிப்பெயர்ப்பு கஸல் கவிதை. அழகியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு...

"காதலையும் தர்க்கத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்தேன்
சமுத்திரத்தில் விழும்
ஒரு மழைத்துளிதான்
தர்க்கம்..."


பிஸ்மில்லா கானின் பாலாஜி கோவில் இறை அனுபவம் நெகிழ்ச்சியான ஒன்று. ஷீரடி சாய் பாபாவின் புகைப்படத்திலிருந்து திருநீறு கொட்டிய நிகழ்ச்சி என்பது சாருவின் மூலம் கேட்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை...
ஆன்மீகமும், மதமும் காசு, பணம் தொடர்புடையதாக மாறிவிட்ட காலங்களில், இறை அனுபவத்தை அவருடைய சொந்த அனுபவங்களில் இருந்தே விளக்கி இருக்கிறார்.செய்கின்ற செயலில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் கடவுளை அடையாளம் என்பதே கர்ம யோகம். நமக்குள் இருக்கின்ற மிருகம் இறந்துவிடும்போது, கடவுளை கண்டறிந்து விடுகிறோம். வாழ்க்கை என்பது அதுதானே...