Saturday, June 16, 2018

ஹுமா குரேஷி


எளிதாக
முடிவுசெய்து
இணைத்துவிடலாம்
நம்மை
ஒரு மதத்தில்
ஒரு இனத்தில்
அல்லது ஏதேனும்
ஒரு பிரிவில்
எனினும் 
அதுவல்ல நோக்கம்

காலம் முழுவதும்
வழங்கப்படும்
வாய்ப்புகளில்
ஏதேனுமொன்றில்
நமது
மூதாதையர்களின்
துயரங்களையோ
துன்பங்களையோ
உணர்ந்தெழுந்தால்
நீயும் நானும் 
சகோதரர்களே!

அப்படித்தான்
வழங்கப்படுகிறது
நம்மிடையே,
ஒவ்வொருமுறையும்
நமக்கான
அடுத்த வாய்ப்பு

நாம்
எப்பொழுது
மனிதனாவோம்
எனும் கேள்விக்கு
பதில் சொல்ல
எப்பொழுது முடியும்
நம்மால்!

கெளரிலங்கேஸ்


மூதாதையர்கள்
செய்த
பாவமெல்லாம்
வாரிசுகள்
தலையிலே
விடியுமென்பதில்
எப்பொழுதும்
நம்பிக்கையில்லை…!

ஆனால்
வாக்குச்சீட்டுக்கு
வாய்க்கரிசி
போட்டவர்களின்
வாரிசுகள்
நிலைதான்
பாவம்….

வாய்கிழிய
வாதிடும்
அரசியல்வாதி
யாரையேனும்
கண்டால்
அவர் வாயில்
மிதித்துவிடு
தோழா…!
********************

இடுப்பு பட்டை

இருக்கக்கூடாது..
கையணிகள்
இருக்கக்கூடாது
கழுத்தணிகள்
இருக்கக்கூடாது
உடைகளும்
உங்கள்
விருப்பங்களல்ல….
நன்று!

சமண பெளத்த
துறவிகளாய்
மருத்துவ 
தேர்வெழுத மாநிலம்
கடந்து செல்லும்
மனிதர்களின்
கேள்விகளெல்லாம்
இன்னுமாடா
இந்தஉலகம்
கடவுள் உண்டென 
இயங்குகிறது…?

 ****************************************

பெரிய
மனிதர்களின்(!)
பேராசைகளெல்லாம்
எளிய
மனிதர்களின்
ஏமாற்றங்களிலேதான்
பூர்த்தியடைகிறது...

தமிழ்நதி

அடர் சிவப்பு
நிறத்திலிருந்தது
அந்த படகு...

நீலம் கலந்த
பசுமையுடனிருந்தது
நீர் பரப்புகளின்
எல்கைவரை...

கருநிற குல்லாயுடன்
படகிலிருந்தாள்
வெள்ளைநிற சிறுமி...

கண்ணுக்கெட்டிய
தூரமெல்லாம்
வெளிர் சிகப்பு நிற
பூக்கள்...

பிறிதொரு
படகிலிருந்த
பெண்ணொருத்தி
வீசிய வலையில்
சிக்கியதெல்லாம்
மனித உடல்கள்...

தாமரை
முகிழ்த்த
கடல் அது...

உதிரத்தை
குடித்தே
உயிர்வாழ்கிறது
இந்த உடலும்
நந்தி கடலும்...

ஒலிவியா

தேவாலயத்தின்
நேரெதிர் சாலை…

இருபுறமும்
அடர் பச்சைநிற
மரங்களின் ஊடாக
மஞ்சள் சிவப்பு
மலர்கள்…

விழுந்துகிடந்த
சிறுபறவையின்
உடலெங்கும்
இரணங்கள்…

பறவையின்
மீதேறி
பிரார்த்தனைகூடம்
விரைந்தது
சிற்றுந்து,
குழந்தைகளின்
இரக்கத்துடன்….

அதிகாலை
மண்வாசனையில்
விரவியது
பறவையின்
உதிர வாடை
நடைபயிற்சிக்கு வந்த
வழிப்போக்கன் வரை…

மரித்த
பறவையை
அடக்கம்செய்தவன்
மீது மலர்களை
சொரிந்தது மரங்கள்
தேவாலய மணியொலியின்போது….

மீண்டும்
திரும்பவில்லை
அந்த ஞாயிற்று கிழமையும்,
வழிப்போக்கனும்…

ஸ்னொலின் வெனிஸ்டா

நீங்கள்
SLR 
துப்பாக்கியில்
குறிவைத்த பொழுது
உங்கள்
சகோதரனை
பார்க்கவில்லையா
மஞ்சள் சட்டைக்காரரே….

நீங்கள்
SLR
துப்பாக்கியில்
குறிவைத்த பொழுது
உங்கள்
நண்பனை
பார்க்கவில்லையா
மஞ்சள் சட்டைக்காரரே….

நீங்கள்
SLR
துப்பாக்கியில்
குறிவைத்த பொழுது
உங்கள்
மகனை
பார்க்கவில்லையா
மஞ்சள் சட்டைக்காரரே….

நீங்கள்
SLR
துப்பாக்கியில்
குறிவைத்த பொழுது
உங்கள்
சகோதரியை
காணவில்லையா
மஞ்சள் சட்டைக்காரரே….

இறந்தவர்களில்
ஒருவர்கூட
உங்கள்
உறவுகளை
நினைவுபடுத்தவில்லையா
மஞ்சள் சட்டைக்காரரே….

உங்களுக்கு
எப்படியோ
மஞ்சள் சட்டைக்காரரே….
இறந்தவர்கள்
ஒவ்வொருவரும்
நம்மை உறவாக
கருதியவர்கள்…

வயோதிகத்தில்
வீட்டிலிருக்கும்
நமது
பெற்றோரின்
மூச்சுக்காற்றில்
நச்சுக்கலந்திட
கூடாதென
போராடியவர்கள்
மஞ்சள் சட்டைக்காரரே….

பள்ளிச் செல்லும்
நமது
குழந்தைகளின்
குடிநீரில்
கொள்ளிவைத்திட
கூடாதென
போராடியவர்கள்
மஞ்சள் சட்டைக்காரரே….

எத்தனையோ
கனவுகளை சுமந்து
கருவிலிருக்கும்
அத்தனை
குழந்தைகளையும்
பாதுகாத்திட
போராடியவர்கள்
மஞ்சள் சட்டைக்காரரே….

வல்லரசாக்கிட
வாய்ச்சவடாலிடும்
புல்லுருவி
அரசியல்வாதிகளுக்கும்
சேர்த்தே
போராடியவர்கள்
மஞ்சள் சட்டைக்காரரே….

உங்கள்
தாயிடம்,
மனைவியிடம்,
சகோதரியிடம்
அல்லது
மகளிடம்,
வெனிஸ்டாவுடன்
பத்து நபர்களை
சுட்டது
நீங்கள்தானென
பெருமையுடன்
சொல்லமுடிந்தால்
அவர்களே
உங்களை
ஆசிர்வதிக்கட்டும்….

Friday, September 29, 2017

பெருங்கனவு பேரரசி - அனிதா

ஆண்டாண்டு 
காலமாய் சுமந்து 
திரிந்த கனவுகளை 
கொன்று தின்ற
அரச பயங்கரவாதிகளின்
காட்டுமிராண்டி
ஆட்சியில்
மரணம் விடுதலையே!
தோல்விகளை
துயரங்களை
வலிகளை
கடந்திட உதவா
கல்விமுறைகளுக்கு
மரணம் விடுதலையே!
காவிகள்
கைமுறித்து
காலடி தடமழித்த
கனவுகளின்
முதல்வர்
இறந்த உடலில்
அரசியல் நர்த்தனம்புரியும்
கபட மூடர்களைவிட
மரணம் விடுதலையே!
அறிவை
ஆயுதமாக்கி
அன்பால்
அரவணைத்து
நிற்காத
அயோக்கியர்கள்
ஆட்சியில்
மரணம் விடுதலையே!
பெருங்கனவு
பேரரசியே!
பிரிந்தும்
இறந்தும்
ஊர் சொல்லும்
உன்னை
எப்பொழுதும்
நீ
எங்கள் வீட்டுப்
பிள்ளை!
தமிழ் வீட்டுப்
பிள்ளை!

நிர்மயி

நிறங்களை
மாற்றும்
ஒவ்வொருமுறையும்
நினைவிலிருக்கட்டும்
மிகநுண்ணிய
காலங்களை
சகமனிதர்களோடு
பகிர்ந்து கொண்டதை....
நிறங்களைப்
போன்று
மனிதர்களை
மாற்றுவது
எளிதல்ல....அனைவருக்கும்....
நிறங்கள்
நிலைத்ததில்லை
நினைவுகள்
நிலைத்திருக்கும்
சில
மனிதர்களில்.....எப்பொழுதும்.....